மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கள்வி நான் அல்ல!

மதுரையில் வையையாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு கரையிலும் மக்கள் குழுமி நீரில் ஆடி ஆரவாரித்து மகிழ்கின்றனர்.

கோப்புப் படம்

Published On :

மதுரையில் வையையாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு கரையிலும் மக்கள் குழுமி நீரில் ஆடி ஆரவாரித்து மகிழ்கின்றனர். வையைப் பெருவெள்ளத்தில் கரையிலிருக்கும் மரங்களிலிருந்து மலர்கள் உதிர்ந்து மணம் பரப்ப, கனிகள் விழுந்து சுவை பெருக ஆற்றுநீர் மக்களையெல்லாம் நீராடி மகிழ அழைப்பு விடுக்கிறது.

கரைகளில் ஆண்களும் பெண்களும் கூட்டமாய் நிற்கும் காலத்தே மகளிர் அணிகலன்களை மிகவும் அணிந்தவர்களாய், மற்றவர்கள் அணிந்தும் சூடியும் உள்ள அணிகலன்களைப் பார்த்த வண்ணம் வந்தனர்.

அப்போது தலைவி ஒருத்தியின் தோழிமார், நம் தலைவி தலைவனுடன் இங்கே நின்றிருக்க தலைவியின் கை வளையலை அணிந்து கொண்டு வந்த பரத்தை ஒருத்தியைக் கண்டு, இவள் நம் தலைவிக்கு மாற்றாள்' என்று விழியால் காட்டிப் பேசிக்கொண்டனர். இதனைக் கண்டு நம் களவு ஒழுக்கம் இவர்களுக்குத் தெரிந்துவிட்டதே எனப் பெரிதும் நாணம் கொண்டான் தலைவன்.

அப்போது தோழிமார், நம் தலைவி கையில் அணியும் வளையலையும் கழுத்தில் அணியும் ஆரத்தையும் இவளுக்கு தந்த தலைவன் நாணுவதைப் பாருங்களடி' என்றனர். இது கேட்ட பரத்தை தன்னோடு சேர்ந்த மகளிர் கூட்டத்தில் ஓடிப்போய் மறைந்து கொண்டனள். தலைவியின் தோழிமார் அவளைத் தொடர்ந்தனர். பரத்தையும் நின்று என்னை ஏன் தொடர்கின்றீர்?' என்று கேட்டாள். அதற்கு தோழிமார், எங்கள் தலைவியின் வளையலையும் ஆரத்தையும் கவர்ந்து கொண்ட உன் மார்பும் எங்கள் தலைவியின் மார்பும் ஒத்ததாக அமையுமா? அவளும் நீயும் சமமாய் ஆவீரோ' என்று கேட்டு வசவுமொழி கூறினர். கூறியதோடு நில்லாமல் பரத்தையே! நீ எங்கள் தலைவியை வந்து வணங்கு' என்றனர். அதற்கு அவள் பகைவரைப் பகைவர் தொழுதல் இழிவாகும், மாற்றாளை மாற்றாள் வணங்குவதும் பெருமைக்கு உரியதில்லை' என்றாள்.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தலைவி, அவளை நோக்கிச் சீறினாள். இனிய சொற்களைச் சொல்லிக்கொண்டு சற்றும் நாணாமல் அவைக்குள்ளே ஆடுவதற்காக வருபவளே, உன் பெருமையைப் பேசாதே! என் தந்தை எனக்கு

அணிவித்த வளையலையும் ஆரத்தையும் நீ பெற்றது திருட்டினால் இல்லையெனில் அவை வந்தவழிக் கூறு' என்றாள் தலைவி.

தலைவியின் இந்த அறை கூவலுக்குப் பரத்தை, மல்லிகை மாலை அணிந்தவளே! நீ யாரிடம் மிகுந்த அன்பு கொண்டிருக்கின்றாயோ அவன் என்னிடத்து அன்பு கொண்டவன். அவன்தான் எனக்கு இந்த வளையலையும் ஆரத்தையும் தந்தான்.

மேலும். இவ் அணிகளைத் தவிர, நின் காலில் கிடக்கும் சிலம்புகளையும் என் பொருட்டு கழற்றுதலையும் நாளை செய்வான். அதனால், அவன் தான்

கள்வன்; கள்வி நான் அல்ல' என்றாள்.

எந்தை எனக்கு ஈத்த இடுவளை, ஆரப்பூண்

வந்த வழி நின்பால் மாயக்களவு அன்றேல்,

தந்தானைத் தந்தே தருக்கு.

மாலை அணிய விலை தந்தான்; மாதர்நின்

கால் சிலம்பும் கழற்றுவான்; சால,

அதிரல் அம் கண்ணி ! நின் அன்பன் எற்கு அன்பன்,

கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்

என ஆங்கு

(பரிபாடல் : வையை 20: 76-83)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.