தமிழாகரர் தெ. முருகசாமி
இன்று உலகெங்கிலும் காணும் போர்க்கோலங்கள் மட்டுமின்றிக் கேட்கும் போர் ஓலங்கள் நெஞ்சை அவசமுறச் செய்கின்றன.
பகுத்தறிவுடைய மனித உலகமா இது? என எண்ணி அலமறுகிறது நெஞ்சம். போரை யார் கட்டுப்படுத்துவது? யார் தலைமை ஏற்பது? என்றே புரியாத புதிராய் நாளும் வெடிகுண்டுச் செய்திகளால் இடிந்து நிற்கிறது உலகம்.
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் உலகத்து இயற்கை என்ற புறநானூற்று (76) தொடர்ப்பொருள் சரிதானா என எண்ணத் தோன்றுகிறது. இயற்கை நியதியின் மறுவாசிப்பான செயற்கை நுண்ணறிவுப் பரவலாகிப் பயன்தரும் உலகளாவிய வாழ்வு, இழிவுபடும்படியாக ஒட்டுமொத்த மானுடமும் அழிந்துபடுமோ? என்ற அச்சத்தில் உறைபனிபோல் உறைந்து கிடக்கும் உலகத் துன்பப் பனிமூட்டத்தை விலக்க எந்தச் சூரியன் உதிக்க வருவான் என எண்ணி ஏங்குகிறது உலகம்.
யானை அடக்கிய கல்போல் வெளியில் தெரியாதிருந்த கோபம், போரின் துருப்புச் சீட்டாய் பொங்கி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது; ஆம் ! இந்த அவலத்தின் மூலத்தைத் தேடினால் 'தீராக் கோபம் போராய் முடியும்' என்ற ஒளவையாரின் கொன்றை வேந்தனில் புதைந்து கிடப்பதை உணர்ந்து ஆறுதல் அடையுமாறு உள்ளதென்றாலும் கொன்றைவேந்தன் என்பதற்குப் பதிலாக 'கொன்றவேந்தன்' என்று உலகப் பேரேட்டின் வரட்டுப் புகழுக்கு முந்திக் கொண்டு இடம்பிடிக்கும் போர்ப்பந்தயம் நடந்து கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.
மரத்தின் வேர் துளிர்க்க முடியாதபடி செய்ய அமிலத்தை ஊற்றி வேரின் உயிர்ப்பைச் சாகடிப்பது போல் உலகையே பாடை கட்டித் தூக்கிச் செல்லத் துணிந்துவிட்ட போர் அவலங்களை என்னென்பது?
எங்கும் ஏவுகணைப் பாய்ச்சல், ஏக்கப் பெருமூச்சு இரைச்சல், எமனையே கை கூப்பி வெட்கமில்லாமல் அழைக்கும் எக்காளத் துப்பாக்கிச்சூடுகள், அவரவரும் தத்தம் தரப்புக்கேற்ப எதிர்எதிராக விடுக்கும் சரம (இறப்புக்குரிய) சொல்லம்புகள் நாட்டையே சேறாக்கி நாளும் வழுக்கி விழச் செய்கின்றன.
நீயா ! நானா ! என்ற ஏசலில் எரிஞ்ச கட்சி எரியாக் கட்சி எனக் கணக்குப் பார்க்கும் கருணையற்ற இரும்புமனச் சீனச் சுவர் போன்ற நீண்ட ஈனவசவுப் பேச்சுகள், வாழ்வா! சாவா! என வக்கரிப்புடன் வரிந்து கட்டுகிறது போருலகம்.
மரத்தின் இயற்கையான சறுகுகள் உதிர்வதைவிட மானுடத்தின் துளிர், பிஞ்சு, காய், கனிகள் உதிர்வதைப் பார்க்கும் அவலம், தூக்கம் கலைந்ததான தொல்லுலகத் தொலைநோக்குப் பேய் இருட்டாக உள்ளது.
சமாதானம் செய்பவன் பாக்கியவான் என்ற வசனத்துக்கும் கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம் என்ற விவேகத்துக்கும் சோதனை வந்துவிட்ட பீடையாகி விட்டது நாம் வாழும் தற்போதைய காலம்.
பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ஆராய்ச்சி தோல்வியடைந்து விட்ட சோக நிலையில் குரங்கு பிரித்துக் கொடுத்ததாகக் கூறும் அப்பம் பற்றிய அவலம் அரங்கேறி விட்டாலும் உலகத் தலைமைக்கு யார் என்ற கேள்விக்கு எங்கே விடை உள்ளது என்பதுதான் அவலத்தின் அவலமாகும்.
அதனால் என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம் எனப் பாரதி பாடியபடி என்று முடியும் இந்த மேற்காசிய போர் என்றும், என்று மடியும் அந்த அமெரிக்க அதட்டல் உருட்டல் என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஆனாலும், ஆம் ! எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ! ஆம் ! ஆம் ! இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று தீர்க்கமாகக் கூறிய மகாகவி பாரதியின் வாக்கு போரின் வெப்பத்தால் ஏற்படும் தாகத்தைத் தணிக்கும் இளவேனில் இளநீராகட்டும் என எதிர்நோக்குவோமாக !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ! பெற்றோர் கவலை

10.5.1976: பினாமி நிலம்: மத்திய சட்டம் வரும் - யார் பெயரில் உள்ளதோ அவருக்கே சொந்தமாக்க திட்டம்

விஜய்யுடன் அமைச்சரவையும் பதவியேற்குமா? யார் யார் இடம்பெறுவர்?

யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


