
இந்த வாரம் கலாரசிகன் - 27-09-2026
பேராசிரியர் க.ப.அறவாணன் - முனைவர் தாயம்மாள் திருமணம் குறித்த பதிவு மிகவும் சுவாரஸ்யமானது.

என் இனிய நண்பரும் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் இரா.அறவேந்தனின் திருமகன் கீர்த்திவாசன் - சுவேதா திருமண வரவேற்பு, செப்டம்பர் 4-ஆம் தேதி திருச்சியில் நடந்தது. திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இறைச்சித்தம் எனக்கு வழங்கவில்லை. மணமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
சிரமம் பார்க்காமல் சென்னை அலுவலகத்துக்கே நேரில் வந்து திருமணத்துக்கு என்னை அழைத்தார் முனைவர் அறவேந்தன். தலைநகரில் உள்ள ஜேஎன்யூ வளாகத்தில் தமிழ் முழங்கச் செய்வதில் முனைப்புக் காட்டுவது மட்டுமல்ல, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தமிழ் பரப்புவதிலும் உறுதியாக இருக்கும் முனைவர் இரா.அறவேந்தன் ஒரு வித்தியாசமான ஆளுமை. அவரது வெற்றியின் ரகசியம் வேறொன்றுமில்லை, குருபக்தி. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் (1998-2001) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய, நம்மிடையே வாழ்ந்து மறைந்த தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த பேராசிரியர் க.ப.அறவாணனின் மனம் கவர்ந்த மாணவர் அறவேந்தன்.
பேராசிரியர் க.ப.அறவாணன் உலகின் ஐந்து கண்டங்களை ஐம்பதுக்கும் மேற்பட்ட முறைகள் சுற்றி வந்தவர். அச்சான அவரது எழுத்துக்கள் 12,000 பக்கங்களிலும் அதிகம். தமிழில் மட்டுமல்லாமல் அவர் ஆங்கிலத்திலும் பல கட்டுரைகள், நூல்கள் எழுதி சர்வதேச அளவில் தமிழின் பெருமைகளை நிலைநாட்ட முற்பட்டவர்.
எளிய குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த பேராசிரியர், ஓராசிரியர் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் படித்துத் தேறியவர். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி விரிவுரையாளர்; பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர்; சென்னை லயோலா கல்லூரி, புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் என்று பேராசிரியரின் பங்களிப்பு அசாத்தியமானது. அவரது அனுபவங்களும், சிந்தனைகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று முனைவர் இரா.அறவேந்தன் சிந்தித்ததன் விளைவுதான் 'அறவாணரின் அனுபவங்கள் பேசுகின்றன'.
ஏற்கெனவே தனது பேராசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார் முனைவர் இரா.அறவேந்தன். அதில் இடம்பெறாத தகவல்களை வெளிப்படுத்த விரும்பிய பேராசிரியர், தனது மாணவரை அழைத்து தன்னுடன் ஒரு வாரம் தங்குமாறு பணித்தார்.
அப்போது அவர் சொல்லச்சொல்ல குறிப்பெடுத்து புத்தக வடிவம் தரப்பட்டதுதான் 'அறவாணரின் அனுபவங்கள் பேசுகின்றன'.
பேராசிரியர் க.ப.அறவாணன் - முனைவர் தாயம்மாள் திருமணம் குறித்த பதிவு மிகவும் சுவாரஸ்யமானது. 'திருமணம் வெற்றி பெறத் தோற்றுப்போக வேண்டும்' என்கிற கருத்தும், 'கடவுள் ஏன் தேவை?' என்பதற்கு பேராசிரியர் தந்திருக்கும் விளக்கமும், 'கெட்ட வார்த்தைகளில் திட்டுதல்-கேடு' என்கிற அறிவுரையும் பேராசிரியரின் தனித்துவமான பார்வையின் அடையாளங்கள். 'ஆண், பெண் இடையே காமத்துக்கு அப்பாற்பட்ட நட்பு இருக்காது' என்று துணிந்து கருத்துச் சொல்ல பேராசிரியர் க.ப.அறவாணனால் மட்டும்தான் முடியும்.
இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் பேராசிரியர் நமக்குக் கற்றுத்தரும் பாடம். இந்தப் புத்தகத்தைத் தனது மகன் கீர்த்திவாசன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கித் தனது குரு பக்தியை வெளிப்படுத்தியிருக்கும் பேராசிரியர் க.ப.அறவாணனின் அன்பு மாணவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
*********
தனது 32-ஆவது வயதில் 'தி சௌண்ட் அண்ட் தி ஃபியூரி' என்கிற படைப்பின் மூலம் அறிமுகமானவர் அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர். அமெரிக்காவின் உள்நாட்டுப் போர், கருப்பர் இனத்தவரின் போராட்டங்கள் உள்ளிட்டவை அவரை எழுத்தாளராக்கியதில் பங்கு வகிக்கின்றன.
'ஆஸ் ஐ லே டையிங்', 'லைட் இன் ஆகஸ்ட்' உள்ளிட்டவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். பல சிறுகதைகளையும் எழுதி இருக்கும் வில்லியம் ஃபாக்னர், குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர். 1949-இல் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது 'எ ஃபேபில்', 'தி ரிவர்ஸ்' நாவல்களுக்கு புலிட்சர் விருது கிடைத்தது. 'தி ரிவர்ஸ்' அவரது 19-ஆவது நாவல் மட்டுமல்ல, கடைசி நாவலும்கூட.
ஃபாக்னரின் கதைகளில் மனிதர்களுக்குச் சமமாக இடங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. கற்பனையுடன் எதார்த்தமும் வரலாறும் கைகோத்துப் பயணிக்கும். இயல்பான ஒரு நிகழ்வைக்கூட அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் ஃபாக்னர் நிபுணர். விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் ஃபாக்னரின் கடிதங்கள், குறிப்புகள் மட்டுமல்லாமல் அவரது படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள் வரை பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு நூலகத்தில் பராமரிக்கப்படுகின்றன.
வில்லியம் ஃபாக்னரின் சிறுகதைகளில் இருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, மொழியாக்கம் செய்திருக்கிறார் கார்குழலி. 'எமிலிக்காக ஒரு ரோஜா' கதையில் தொடங்கி 'அந்தி நேரச் சூரியன்' வரையில் எட்டு சிறுகதைகள் இந்தத் தொகுதியில் இடம்பெறுகின்றன. கதைகளை மொழிபெயர்த்த கார்குழலி கூறியிருப்பதைப்போல, சில கதைகள் நமது தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் இல்லாத சூழலில் அமைந்திருக்கின்றன. மொழிபெயர்ப்பில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் தெரிகின்றன.
கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களின் வழியாகக் கதை சொல்லும் நுட்பம் ஃபாக்னருடையது. ஒவ்வொரு கதையிலும் அந்த மண்ணின், மக்களின் வாழ்வியலைத் துல்லியமான விவரணைகள்மூலம் நாம் புரிந்துகொள்ள வழிகோலுகிறார் அவர்.
'தமிழினி' என்கிற மின்னிதழில் வெளியான சிறுகதைகள்தான் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன.
பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஒருவரின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் இந்த முயற்சி, ஒப்பிலக்கிய ஆய்வாளர்களுக்கும் உதவக்கூடும்.
*********
யாழ்ப்பாணம், நெடுந்தீவு சபேசனின் 'அம்மா' என்கிற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டவை இந்த வரிகள். இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையா என்ன?
அம்மா
இல்லாதவர்களை விடவும்
அம்மாவுடன்
இல்லாதவர்கள்தான்
அதிகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






