தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தீங்கனி தொடங்கி வைத்த திருமணம்

மாதுளம் பழத் தோட்ட உரிமையாளர் ஒருவர், தமது தோட்டத்திற்கு வந்தார்; காவலாளி முபாரக்கிடம், ""எனக்கு ஒரு புளிப்பான மாதுளம் பழம் தேவை'' என்றார். காவலாளி ஒரு மாதுளம் பழம் பறித்துவர, அது இனிப்பாய் இருந்தது.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:18 am

ரஞ்சனா பாலசுப்ரமணியன்

மாதுளம் பழத் தோட்ட உரிமையாளர் ஒருவர், தமது தோட்டத்திற்கு வந்தார்; காவலாளி முபாரக்கிடம், ""எனக்கு ஒரு புளிப்பான மாதுளம் பழம் தேவை'' என்றார். காவலாளி ஒரு மாதுளம் பழம் பறித்துவர, அது இனிப்பாய் இருந்தது. உரிமையாளர் கடுங்கோபம் கொண்டார். ""இத்தனை ஆண்டுகளாக என் தோட்டத்தில் வேலை செய்தும் எந்தப் பழம் புளிக்கும், எது இனிக்கும் என்பதைக் கூட கவனித்து வைக்காமல் இருக்கிறாயே?'' என்று கடிந்து கொண்டார்.

அதற்கு காவலாளி முபாரக், ""உரிமையாளர் அவர்களே! தோட்டத்தையும் அதைச் சார்ந்த சகல பொருட்களையும் பாதுகாக்கும் பணியிலேதான் நான் உள்ளேன். அதை நான் முறையாகச் செய்து வருகிறேன். அதிலுள்ள கனிகளைப் புசிப்பதற்கு நீங்கள் எனக்கு அனுமதி தரவில்லையே'' என்று பதில் சொன்னார். தோட்டத்தின் உரிமையாளருக்கு இந்தப் பதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் ஒரு சிறந்த வியாபாரியும்கூட! வேலையாள் முபாரக்கிடம், ""இன்று முதல் தோட்டத்தை காவல் காக்கும் பணியிலிருந்து உன்னை மாற்றியமைக்கிறேன். எல்லா நேரமும் என்னுடன் இரு; எனது ஆலோசகராகச் செயல்படு'' எனப் பணித்தார்.

தோட்டக் காவலாளி முபாரக், தோட்ட உரிமையாளரின் ஆலோசகராகப் பதவி உயர்வு பெற்றார். காவலாளியிடம் இருந்த நம்பகத்தன்மை உள்ளிட்ட பண்புகளே அவரை இந்த அளவு உயர்த்தியது.

இந்நிலையில் தோட்டத்தின் உரிமையாளர், காவலாளியாக இருந்த முபாரக்கின் நல்லியல்புகளை மனதிற்குள் எடை போட்டுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரது மகளை திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு மாப்பிள்ளை பார்க்கும் தருணம் வந்தது. தனது ஆலோசகர் முபாரக்கிடம் இதைத் தெரிவித்து, ""நல்ல மணமகன் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறுங்கள்'' என்றார் முதலாளி.

அதற்கு முபாரக் ""முஸ்லிம்கள், "மார்க்கப் பற்று' என்பதை மையமாக வைத்துத்தான் திருமணத்தை மேற்கொள்ள வேண்டும்'' எனத் தீர்மானமாகப் பதிலளித்தார்.

ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி-அன்ஹா) அவர்கள் நபிகளாரின் குப்பி (மாமி) மகள். இவருக்கும் மார்க்கப் பற்றுள்ள அடிமையான ஜைதுப்னு ஹாரிதா (ரளி - அன்ஹு) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதை இஸ்லாமிய வரலாறு அறியத் தருகிறது.

கண்ணியம் மிகுந்த அன்சாரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபித் தோழர், தனது மகளைத் திருமணம் முடிப்பது சம்பந்தமாக நபிகளாரிடம் ஆலோசனை கேட்டார்.

அதற்கு நபியவர்கள் ""சுவனவாசிக்கு உன் மகளைத் திருமணம் செய்விக்க நாடினால் இதோ பிலால் (ரளி-அன்ஹு) அவர்களுக்கு திருமணம் முடித்து வை'' என்றார்கள். அவரும் சரியென சம்மதித்தார். பிலால் அவர்களோ அருவருப்பான தோற்றமுள்ள கருநிற (ஹபஷீ) அடிமையாக இருந்தார். இருப்பினும் இஸ்லாமில் மார்க்கப் பற்றுள்ளவரைத்தான் மணாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெளிவு. மீண்டும் நம் கதைக்கு வருவோம்...

தோட்ட உரிமையாளர், தமது ஆலோசகர் முபாரக் சொன்ன உயர்ந்த கருத்தைத் தனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர், ""நமது மகளை முபாரக் அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தால் என்ன? அவரைவிட மார்க்கப்பற்று, நம்பகத் தன்மை, மார்க்க ஞானம் பெற்றவர் வேறு எவர் இருக்க முடியும்?'' எனக் கேட்டு முடிப்பதற்குள் அவரது மனைவி சரியெனச் சம்மதிக்க, திருமணமும் நடந்தது.

ஹதீதுக் கலை வல்லுனர்களின் வரலாற்றைக் குறிக்கும் "புஸ்தாணுல் முஹத்திதீன்' என்ற நூலில், மிகச் சிறந்த ஹதீது கலை வல்லுனராக விளங்கியவர்களின் பட்டியலில் அப்துல்லாஹ் இப்ணு முபாரக்-ரஹ்- அவர்களும் ஒருவர். இவர்கள் யாரென்றால் தோட்டக் காவலாளியாக இருந்து, ஆலோசகராக மாறி, அத்தோட்ட உரிமையாளரின் மருமகனாக மாறிய முபாரக் -ரஹ்- அவர்களின் மகன் ஆவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.