/

நாம் ஏன் பிறரை மன்னிக்க வேண்டும்?

மனிதருடைய தவறுகளை நீங்கள் மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களையும் மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள்  பரமபிதா உங்களையும் மன்னிக்க மாட்டார்'-மத்தேயு 6:14-15)  நமக்குத் தீமை செய்த மக்களிடம் கோபம்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:28 pm

அபி

மனிதருடைய தவறுகளை நீங்கள் மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களையும் மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள்

 பரமபிதா உங்களையும் மன்னிக்க மாட்டார்'-மத்தேயு 6:14-15)

 நமக்குத் தீமை செய்த மக்களிடம் கோபம், கசப்பு இவற்றைக் காட்டுவது நமது இயற்கையான சுபாவம்! நமது கோபம் "அநீதியானது' என்றும் நமது கசப்பு "பேய்த்தனத்துக்கடுத்தது' என்றும் இறைவன் கூறுகிறார்.

 இந்தப் பாவங்களை நம்முடைய நல்ல சுபாவங்களைக் கொண்டு திருத்திக் கொள்ளாவிடில் இவற்றை நாம் மாற்ற முடியாது.

 இதற்கு ஒரே தீர்வு மன்னிப்பதுதான்! ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல! மன்னிப்பதற்கு நாம் நமது உணர்வுகளுக்கு எதிராக செயல்பட வேண்டும். இங்குதான் இறைவன் நமக்கு உதவுகிறார். எவ்வாறு பிறரை மன்னிக்க வேண்டும் என்பது குறித்து மட்டுமல்லாமல், அதைச் செய்வதற்கு வேண்டிய மன பலத்தையும் இறைவன் நமக்குக் கொடுக்கிறார்.

 கிறிஸ்து இயேசு பிறரை மன்னித்தது போல நாமும் எவ்வாறு பிறரை மன்னிக்கலாம் என்று பார்ப்போம். இதற்குத் தேவை இறைவனின் கிருபை. இறைவனின் மக்கள், பிறரைப் போல அல்லாமல் தங்களது பிரச்னைகளைத் தாங்களே சரி செய்து கொள்ள முடியும் என்பது நிச்சயம்!

 பிறரை மன்னிக்க வேண்டும் என்ற கட்டளையானது நாம் இறைவனுக்குக் கீழ்ப்படிகிறோமா என்பதை அறியும் ஒரு சோதனையும்கூட. மன்னிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காண வேதாகமத்தின் கோட்பாடுகளை நன்கு கவனித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

 கிறிஸ்து இயேசு, மத்தேயு 22-ம் அதிகாரம் 35-40 வசனங்களில் வேதாகமத்தின் சாராம்சமாகக் கூறுவது என்னவென்றால்-

 முதலாவது இறைவனை நேசிக்க வேண்டும் என்பதும் இரண்டாவதாகப் பிறரை நேசிக்க வேண்டும் என்பதுமே!

 "நான் இறைவனை நேசிக்கிறேன்' என்று கூறும் ஒருவன் தன் சகோதரனைப் பகைத்துக் கொண்டால் அவன் பொய்யனாகிறான். தன்னால் பார்க்க முடிகிற சகோதரனிடத்தில் அன்பு செலுத்தாமல் இருக்கிறவன் எப்படித் தான் காணாத இறைவனிடத்தில் அன்பு செய்ய முடியும்? என்று இயேசு கேட்கிறார்.

 நாம் ஒருவரை மன்னிக்க மறுத்தால் அவர்களை நாம் நேசிக்கிறோம் என்று கூறுவதில் அர்த்தமே இல்லை!

 பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே! உமது பிள்ளைகளிடத்தில் நீர் மனதுருக்கத்தை வலியுறுத்துகின்றீர். இந்தச் செய்கையில் நாங்கள் பலவீனமுள்ளவர்களாக இருக்கிறோம். சென்ற நாள்களில் நாங்கள் பிறரை மன்னிக்காதிருந்ததைக் குறித்து எங்களை மன்னிப்பீராக! அதிக உண்மையுள்ளவர்களாக இருக்க எங்களுக்குக் கற்பியும். கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு நீர் ஏற்கெனவே கொடுத்த நன்மைகளை நாங்களும் பிறருக்குச் செய்யும்படி எங்களுக்கும் கட்டளையிடுகிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும்.

 எங்களுக்கு கிறிஸ்து இயேசு இதற்கு வேண்டிய சக்தியைத் தருவாராக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.