இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதியில் சூரியன் தனது தேவியர் சாயாதேவி, உஷாதேவியுடன் மேற்கு நோக்கியும் மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கியும் உள்ளன. இங்கே நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பானது. ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானைக்கு திருக்கல்யாணம் செய்வித்து திருமண தோஷம் நீங்கி திருமணம் கை கூடியவர்கள் இங்கே அநேகம். மேலும், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் மூழ்கி முருகனை தரிசித்து அர்ச்சித்தால் திருமணத்தடை நீங்கி சுபநிகழ்வு உடனே நடந்தேறும். தமிழகத்தில் உள்ள பிரார்த்தனைத் தலங்களில் மிகவும் சிறப்பான தலமாக விளங்குகிறது குமார வயலூர். நோய் தீர, துன்பம் விலக, குழந்தை பாக்கியத்துக்கு, ஆயுள் விருத்திக்கு, கல்வி பெற, அறிவும் செல்வமும் ஓங்க, விவசாயம் செழிப்படைய என பலவற்றுக்கும் இங்கே முருகனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேற முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், அங்க பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் என செய்கிறார்கள்.