மனித நேயத்தின் அச்சாணி!
""நேர்மையே சிறந்த கொள்கை'' என்பர் பெரியோர். மனிதர்கள் அனைவரும் நேர்மையாகவும், உண்மையாளராகவும் வாழ்ந்தால் போட்டி, பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களுக்கு இடமே இல்லை எனலாம்.பண்டைய நாளில் நடந்த உண்மை சம்ப


""நேர்மையே சிறந்த கொள்கை'' என்பர் பெரியோர். மனிதர்கள் அனைவரும் நேர்மையாகவும், உண்மையாளராகவும் வாழ்ந்தால் போட்டி, பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களுக்கு இடமே இல்லை எனலாம்.பண்டைய நாளில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றினை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக நபி மொழி நூலில் கூறப்பட்டுள்ளது.
பனூ இஸ்ராயீல் என்ற கூட்டத்தாரில் ஒருவர், மற்றொருவரிடம் நிலம் ஒன்றினை விலைக்கு வாங்கினார். அந்நிலத்தைப் பயிரிட மண்ணைத் தோண்டும்போது, ஒரு தங்கப் பெட்டகத்தைக் கண்டெடுத்தார். நிலம் விற்றவரிடம் சென்று, ""நான் உங்களிடம் நிலத்தை மட்டுமே விலைக்கு வாங்கினேன். அதில், ஒரு தங்கப் பெட்டகத்தைக் கண்டெடுத்தேன். அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்'' எனக் கூறி அதை ஒப்படைத்தார்.
நிலத்தை விற்றவரோ, இதை ஒப்புக்கொள்ளவில்லை. ""நான் உங்களுக்கு நிலத்தையும், அதில் உள்ள அனைத்தையும் சேர்த்துத்தான் விற்றேன். எனவே, நீங்கள்தான் இப்பெட்டகத்திற்கும் உரிமையாளர்'' எனக் கூறினார்.
நிலத்தை வாங்கியவரோ, அந்தப் பெட்டகத்தை வாங்க மறுத்துவிட்டார். அவ்வூரிலுள்ள சான்றோர் ஒருவரிடம் இவ்வழக்கு சென்றது. இந்த அதிசய வழக்கைக் கேட்டு, அவரே ஒரு கணம் திகைத்துவிட்டார்.
""உங்கள் இருவருக்கும் வாரிசுகள் உள்ளனரா?'' என சான்றோர்
கேட்டார்.
""ஆம்! எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். மணப்பருவம் எய்தியவள்'' என நிலத்தை விற்றவர் கூறினார்.
நிலத்தை வாங்கியவர், ""மணமுடித்துக் கொடுக்க வேண்டிய வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான்'' என்றார்.
இருவர் கூற்றையும் கேட்ட சான்றோர், ""உம்முடைய மகளை அவருடைய மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அந்தத் தங்கப் பெட்டகத்தை மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விடுங்கள்'' என்று தீர்ப்பு வழங்கினார்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா. நூல்: புகாரி/முஸ்லீம்).
""இறைவன் உங்கள் உள்ளங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் இதயத்திலுள்ள எண்ணங்களையும், வெளிப்படையான செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான்'' என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பர் முன்னோர். மற்றவர்களுடைய பொருள்களுக்கு ஆசைப்படாத உயர்ந்த குணமே சாலச் சிறந்தது. தூய்மையான எண்ணமுடையோர்கள் ஒருபோதும் நிலை பிறழ மாட்டார்கள். எனவே மனிதப் பண்புகளே மனித நேயத்துக்கு அச்சாணியாகும் எனலாம்.
மனிதப் பண்புகளை பயின்று வாழ்ந்தால் உலகம் புனிதமாகும். மனித நேயம் மலரும். சகோதரத்துவம் ஓங்கி சண்டைகள் ஒழியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...