மறுமை நிலையானது!
இறைவன் அனைத்து படைப்பினங்களையும்விட மனிதர்களை மட்டுமே மிகச் சிறப்பாகப் படைத்துள்ளான்.


இறைவன் அனைத்து படைப்பினங்களையும்விட மனிதர்களை மட்டுமே மிகச் சிறப்பாகப் படைத்துள்ளான்.
அதாவது, உலோக இனத்தைவிட தாவர இனம் சிறந்தது. தாவர இனத்தைவிட, அனைத்து உயிரினங்களும் சிறந்தவை. அனைத்து உயிரினங்களை விட, அல்லாஹ் மனிதர்களை மிக உயர்வாகவும், மிகச் சிறப்பாகவும் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட உயர்வுக்கு ஏற்றபடி மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைக் கண்டு பிடிக்கும் நல்லறிவையும், ஆற்றலையும், ஒன்றை ஊகித்துணரும் தன்மையையும், இம்மை - மறுமை பற்றிய சிந்தனையையும், ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான வாழ்வாதாரங்கள் அனைத்தையும் படைத்துள்ளான் அல்லாஹ்.
""அல்லாஹ் ஒருவன்; மனிதர்களை எதன் மீது இயற்கையாகப் படைத்தானோ, அத்தகைய அல்லாஹ்வின் இயற்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதன் மீதே மனிதர்களை இயற்கையாக அமைத்துள்ளான் (அல்குர் ஆன்: 30:30)''.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருளாதாரம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த இறைவன் அதற்கான வழி வகைகளை அளித்துள்ளான். இறைவனின் சக்திக்கு ஏற்றபடிதான் மனிதனின் செயல்கள் உருவாகின்றன.
அதாவது, இறைவன் நம்மை விவசாயியாக, தச்சராக, கட்டடம் கட்டுபவராக, நகை செய்யும் ஆசாரியாக, நெசவாளியாக, தையற்காரராக, இராணுவ அதிகாரியாக, விஞ்ஞானியாக, வணிகராக, மருத்துவராக, பொறியாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக, ஆசிரியராக இன்னும் பற்பல துறைகளில் வல்லுனராக பதவிகளை அளித்துள்ளான். இவை அனைத்தும் அல்லாஹ் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகள் ஆகும்.
ஆகையால், நாம் நமது வல்ல நாயகனுக்கு நன்றியுள்ளவர்களாக, அவனது கட்டளைகளை ஏற்று, தீமையான செயலிலிருந்து விலகி, சீர் கெடாது நடப்பது நமது தலை சிறந்த கடமையாகும்.
""மறுமையை மறந்து விரைவில் அழியும் இவ்வுலகை எவர் நாடுகிறாரோ, அவருக்கு அதில் நாம் நாடியதை, நாம் நாடியவருக்கு விரைந்து கொடுப்போம்; பிறகு மறுமையில் அவருக்கு நரகத்தை ஏற்படுத்துவோம்; அதில் இழிவாகப்பட்டவராகவும் அவர் புகுவார் (அல்குர் ஆன்: 17:18)''.
""காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஈமான் கொண்டும், நற்செயல்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும், ஒருவருக்கொருவர் உபதேசித்தும் கொள்கின்றனரே! அத்தகையோரைத் தவிர. (அல்குர் ஆன்: 17:18)''.
மேற்கண்ட வசனத்தில், காலம், இறை நம்பிக்கை, நற்செயல்கள், உண்மை, பொறுமை என ஐந்து செயல்களைப் பற்றிக் கூறியுள்ளான் இறைவன். எனவே. இவற்றின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோமா! நன்மையான செயல்களில் ஈடுபடாது நெடுநாள் வாழ்வதை விட, நன்மையான நல்ல பல செயல்களைப் புரிந்து, குறைவான நாள்கள் வாழும் வாழ்க்கைதான் மேலானது.
""இறைவன் ஒருவருக்கு நெடுநாள் வாழ அருள்புரிந்து, அதில் அதிகம் நன்மைகளைச் செய்பவரே மனிதரில் மிகச் சிறந்தவர். அவருக்கு சோபனம் உண்டாகட்டும்'' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளார்கள்.
இவ்வுலக வாழ்க்கை (இம்மை) நிலையற்றது. அதன் வாழ்நாளும் குறைவானது. ஆனால், மறுவுலக வாழ்வுதான்(மறுமை) நிலையானதும், மேலானதும் ஆகும்.
எனவே, நாம் உரிய காலத்தில் உரியவைகளை இறைக் கட்டளைப்படியும், நபிகளாரின் சொல் - செயல்படியும் ஆற்றி மறுவுலக நல் வாழ்வினைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...