நட்சத்திரங்களுக்கான திருக்கோயில்!

​ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மை இயக்குவது நமது ஜென்ம நட்சத்திரங்களோயாகும். அதே போன்று ஒவ்வொரு இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உள்ளது.
நட்சத்திரங்களுக்கான திருக்கோயில்!
Updated on
2 min read


ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மை இயக்குவது நமது ஜென்ம நட்சத்திரங்களோயாகும். அதே போன்று ஒவ்வொரு இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உள்ளது. மனிதராலும், தெய்வமானாலும் அவர்களுக்கும் ஜென்ம நட்சத்திரம் உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு திருக்கோயில் உள்ளது. அங்கு சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டால் அவர்களுக்கு துன்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் என பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் ஜென்ம நட்சத்திரத்திற்கே உரிய அதிதேவதைகளை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் 18 கி.மீ.தூரத்தில் உள்ளது உக்கம்பெரும்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள கூழமந்தல் ஏரிக்கரையோரத்தில் 27 நட்சத்திரங்களுக்குமான அதிதேவதைகளின் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்கள் (மரங்கள்) அமைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருவது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு.

திருக்கோயிலின் அமைப்பு: இக்கோயிலின் முகப்பில் 3 நிலை கொண்ட ராஜகோபுரமும், கோயிலுக்குள்ளே 27 நட்சத்திரத்திரங்களுக்கும் உரிய அதிதேவதைகளுக்கு கோயில்களும், கோயிலுக்கு வெளியே இடதுபுறத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்களும் (மரங்கள்) அமைந்துள்ளன. சனி,ராகு,கேது என மூவருக்கும் தனித்தனி சந்நிதிகளும் உள்ளன. இது மட்டுமின்றி 28-ஆவது நட்சத்திரமான அபிஜித் என்ற நட்சத்திரத்திற்கான அதிதேவதையும் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அபிஜித் நட்சத்திரம் யாருக்கும் ஜென்ம நட்சத்திரமாக வருவதில்லை.

ஒருலட்சம் ருத்திராட்ச சிவலிங்கம்:

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அண்மையில் இத்திருக்கோயிலுக்கென ஒரு லட்சம் ருத்திராட்சங்களால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை காணிக்கையாக வழங்கினார். இச்சிவலிங்கத்துக்காக தனியாக திருக்கோயில் கட்டும் திருப்பணியும் நடந்து வருகிறது.

வழிபாட்டின் பலன்கள்:

ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜென்ம நட்சத்திரத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது. பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நமக்கு சிறப்புடைய நாள்களில் இத்திருக்கோயிலுக்கு சென்று நமது பெயர்,ஜென்ம நட்சத்திரம்,ராசி உள்ளிட்ட விவரங்களை அர்ச்சகரிடம் சொல்லி வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் 27 நாள்களுக்கு ஒருமுறை அவரவர்க்குரிய ஜென்மநட்சத்திரம் வரும். அந்த நாளில் இத்திருக்கோயிலில் உள்ள அவரவர்களுக்கே உரிய நட்சத்திர அதிதேவதைகளை வழிபாடு செய்வது மிகச்சிறந்த பலனைத் தரும். ஜென்ம நட்சத்திர நாளில் அதாவது பிறந்த நாளில் பலரும் இக்கோயிலுக்கு வந்து அவரவர்களுக்கு உரிய அதிநட்சத்திர தேவதைகளுக்கு அர்ச்சனை செய்தும், கலசத்தண்ணீர் ஊற்றியும் வழிபாடு செய்கிறார்கள். இதனால் சகலவிதத் துன்பங்களும் நீங்கி நிம்மதி கிடைக்கிறது. முற்பிறப்பில் செய்த பாவம்,நாகதோஷம்,லக்ன தோஷம்,கிரகதோஷம் ஆகியனவும் விலகுகின்றன.

திருவிழாக்கள்:

இத்திருக்கோயில் மூலவராக நட்சத்திர விருட்ச விநாயகர் என்ற பெயரில் விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.இவரே இக்கோயிலின் முதன்மையானவராகவும் இருந்து வருகிறார். தமிழ்ப்புத்தாண்டு, சித்ரா பெüர்ணமி, விநாயகர் சதுர்த்தி விழா, கஜமுகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி போன்றவை முக்கியத் திருவிழாக்களாக நடைபெறுகின்றன. தைமாத காணும் பொங்கலன்று 108  கோபூஜையும், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. மாதம் தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் மாலையில் சிறப்பு அபிஷேகமும்,1008 சகஸ்ர நாமாவளி அர்ச்சனைகளும் நடைபெறுகின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் கோயில் திறக்கப்படுகிறது. தொடர்புக்கு: அர்ச்சகர் வைத்தீஸ்வரன் -9943500878.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com