ஈரம் கொல்லி அழைத்த நம்பெருமாள்!

ஸ்ரீரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதரின் உற்சவ மூர்த்தம் "அழகிய மணவாளப்பெருமாள்' என்பதாகும். பெருமாள்களில் இவர் மட்டுமே "நம்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.
ஈரம் கொல்லி அழைத்த நம்பெருமாள்!
Updated on
2 min read


ஸ்ரீரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதரின் உற்சவ மூர்த்தம் "அழகிய மணவாளப்பெருமாள்' என்பதாகும். பெருமாள்களில் இவர் மட்டுமே "நம்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். இந்தத் திருப்பெயர் இவருக்கு எப்படி வந்தது என்பதைப் பார்க்கலாம்: 
அந்நியர் படையெடுப்பினால் குந்தகம் ஏற்பட்ட புராதனமான ஆலயங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. அப்போது முன்னெச்சரிக்கையாக திருமாலை பாதுகாக்க முயற்சித்த "பிள்ளை லோகாச்சார்' என்ற வைணவப் பெரியவர், அடியார்கள் துணையுடன் மூலவர் ரங்கநாதப் பெருமாளையும், தாயார் ரங்கநாயகியையும் மறைத்து சுவர் எழுப்பினார். 
உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளப் பெருமாளைப் பாதுகாக்க வேண்டி, உற்சவரைத் தன் தோளில் சுமந்து கொண்டு, ஆபத்தான வனப் பகுதிகள், மாறி வரும் தட்பவெப்பநிலைகள், கள்வர்கள் பயம், தன் வயோதிகம் என்று எதனையும் பொருட்படுத்தாமல், யார் கண்களிலும் படாதபடி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள பல ஊர்களுக்கு எடுத்துச் சென்றார் பிள்ளை லோகாச்சார். 
அந்நிலையிலும் தன்னால் முடிந்தவரை உற்சவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்து வந்தார். அரங்கனைக் காப்பதில் அவருக்கு உறுதுணையாகப் பல வைணவப் பெரியவர்களும், பக்தர்களும் பெரும் பங்காற்றி இருக்கின்றனர். பல்வேறு இன்னல்கள், சூழல்கள் கடந்து, பிள்ளை லோகாச்சார் பரமபதம் எய்தினார். 
பின்னர் சுமார் 48 ஆண்டுகள் கழித்து, எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட்ட நிலையில், மீண்டும் உற்சவரை ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்தனர் பக்தர்கள்.  அவர்களால் கொண்டு வரப்பட்ட சிலையின் உண்மைத் தன்மையைப் பற்றி ஒரு சிலர் சந்தேகம் கொண்டனர். 
"இது உற்சவர் அழகிய மணவாளப் பெருமாள்தானா?' என்று குழப்பமடைந்தனர். அதுகுறித்து அடையாளம் கூறுவதற்கும் பெரியவர்கள் யாரும் உயிருடன் இல்லை. இந்த நிலையில், அப்போது 90 வயதைக் கடந்த பார்வை மங்கிய சலவைத் தொழிலாளி ஒருவர் ""இந்தக் குழப்பத்தை என்னால் தீர்க்க முடியும்!''  என்றார். அக்காலத்தில் சலவைத் தொழில் புரிபவர்களை "ஈரம் கொல்லி' என்று அழைப்பர். துணியைத் துவைத்து, உலர்த்தி, ஈரத்தைப் போக்கிக் கொடுப்பதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. அவர் கூறியதாவது:
"சிறுவயது முதலே பெருமாளின் உடைகளைத் துவைப்பவன் நான். அதனால் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளப் பெருமாள் சிலையில் ஒரு நல்வாசம் வீசும் என்பது நான் அறிந்த விஷயம். அது எனக்கு பிடித்த வாசமாகும். அதனால் அவருக்கு திருமஞ்சனம் செய்து ஈர உடையை என்னிடம் கொடுங்கள். நான் இது உண்மையான சிலையா என்று சொல்கிறேன்' என்றார். 
அவ்வாறே திருமஞ்சனம் செய்து, பெருமாளின் உடைகள் அவரிடம் தரப்பட்டன. வாங்கிய உடையை பக்தியோடு கண்ணில் ஒற்றிக்கொண்டு, துணியைப் பிழிந்து அந்த நீரைப் பருகினார்.  ஆண்டுகள் பல கழிந்தபோதிலும் அந்தத் தீர்த்தம் தொண்டையில் இறங்கிய அடுத்த கணம், தன்னை மறந்து "இவரே நம் பெருமாள்!' என்று ஆனந்தக் கூத்தாடினார். அவரைத் தொடர்ந்து மக்கள் கூட்டமும் விண்ணதிர "நம்பெருமாள்', "நம்பெருமாள்' என்று முழங்கியது. அன்று முதல் அப்பெயரே நிலைத்து விட்டது.
நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் ஓர் அங்கமாக டிசம்பர் 24-ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்திலும் (மோகினி அலங்காரம்), தொடர்ந்து 25-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று சர்வ அலங்காரனாக பரமபத வாசல் எழுந்தருள்வார். அது ஓர் கண்கொள்ளாக் காட்சியாகும்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com