தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குலம் காக்கும் கொப்புடையம்மன்!

தமிழகத்தில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார  மக்கள் அனைவரின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் அன்னை ஸ்ரீ கொப்புடையம்மன்.

News image
Updated On :8 மே 2020, 1:37 pm

ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தமிழகத்தில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார  மக்கள் அனைவரின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் அன்னை ஸ்ரீ கொப்புடையம்மன். இந் நகரின் மையப்பகுதியில் அம்பிகையின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் கிராம தேவதையாக (இப்பொழுது நகரின்) விளங்குகிறாள் கொப்புடைய நாயகி அம்மன். 

ஆதிசங்கரர் இத்தலம் வந்து கொப்புடை அம்மனை வழிபட்டார் எனக் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் இந்த இடம் முழுவதும் காரை மரங்கள் அடர்ந்து செழித்த வனப்பகுதியாக இருந்த காரணத்தால் இவ்வூருக்கு "காரைக்குடி' எனப் பெயர் ஏற்பட்டது. இந்த அம்பிகையைப் பற்றி ஒரு செவிவழி செய்தி கூறப்படுகிறது.

இங்கு காட்டுப்பகுதியில், இக்கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோயிலில் விளங்கும் காட்டம்மனின் தங்கையாக கொப்புடை நாயகி விளங்குகிறாள். இக்கோயில் வரலாற்றின்படி கொப்புடையம்மனுக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால் காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள் உண்டு. கொப்புடையம்மன் தன் சகோதரியைக் காண வரும்போழுது குழந்தைகளுக்குக்காக கொழுக்கட்டை முதலான தின்பண்டங்களை செய்து எடுத்து வருவாள். ஆனால், காட்டம்மனோ  தன் சகோதரி குழந்தையில்லாமலிருப்பதால், தன் குழந்தைகளைப் பார்த்தால் கண்பட்டுவிடுமென்று கருதி, அவர்களை ஒளித்து வைத்து விடுகிறாள். தன்னைத் தவறாக நினைத்த சகோதரியின் மீது கோபம் கொண்ட கொப்புடையம்மன், ஒளித்து வைத்த குழந்தைகளைக் கல்லாக்கி விடுகிறாள். அப்படியும் தன் கோபம் தணியாமல் அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடி வந்து, அங்கேயே தெய்வமாக அமர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

அம்பிகை தன் திருக்கோயிலில் ஸ்ரீ சக்கரத்தின் மீது கிழக்கு நோக்கி நின்ற நிலையில் ஜ்வாலை கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவத் திருமேனியில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல்கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் அருள்பாலிக்கிறாள். துர்க்கை அம்சத்துடன் விளங்கும் அம்பிகை, கல்வி, செல்வம், வீரம் என மூன்றையும் வாரி வழங்கும் வரப்பிரசாதியாய் விளங்குகிறாள். இந்த மூர்த்தமே உற்சவ மூர்த்தியாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இத் திருத்தலத்தில் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். 

இக்கோயிலில் பிரம்மோத்சவம் எனப்படும் பெருந்திருவிழா மிகவும் விசேஷமானது. இத்திருவிழா சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைகாசி முதல் வாரம் முடிய பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளில், மூன்றாவது செவ்வாயன்று கொப்புடையம்மனுக்குப் பூச்சொரிதல் விழா நடைபெறும். இத்திருவிழாவின் எட்டாம் நாள் காலையில் அம்பிகையின் தேரோட்டம் நடைபெறும். அந்த தேர், பிற்பகலில் புறப்பட்டு, மாலையில் காட்டம்மன் கோயிலை அடைந்து, இரவு அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு ஆலய நிலைக்கு வந்து சேரும்.  இத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொள்வர்.

மிகவும் சக்தி வாய்ந்த கொப்புடையம்மனை தன் குலம் காப்பாள் என்ற நம்பிக்கையோடு வணங்குபவர்களின் தீராத நோய்களைத் தீர்த்து வைப்பதுடன், அவர்களை வளமாகவும் வாழ வைக்கிறாள். இங்குள்ள மக்கள் தங்கள் விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், கல்யாண வரம், குழந்தை பாக்கியம் வேண்டியும் அம்பிகையை பிரார்த்தித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். 

இவ்வாண்டு, தற்கால சூழ்நிலையைக் கருதி, திருவிழாக்கள் நடைபெறவில்லையானாலும் இச்சமயத்தில் அம்பிகையை நினைவு கூர்ந்து, தங்கள் இல்லங்களிலேயே அம்பிகையை வணங்கி அவள் அருள் பெறுவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.