தேவியின் திருத்தலங்கள் - 20: திருவேற்காடு கருமாரியம்மன்

படைத்தல், காத்தல், அழித்தல், என்ற முத்தொழிலுக்கும் அதிகாரி அம்பிகை. எனவேதான் அவளை "ஸ்ருஷ்டி கர்த்ரீ', "கோப்த்ரீ', "சம்ஹாரிணீ' என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
தேவியின் திருத்தலங்கள் - 20: திருவேற்காடு கருமாரியம்மன்

"மகாபத்மாடவ்யாம் ம்ருதித மல மாயேன மனஸா மஹாந்த பச்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம்' 

-செளந்தர்ய லஹரி 

படைத்தல், காத்தல், அழித்தல், என்ற முத்தொழிலுக்கும் அதிகாரி அம்பிகை. எனவேதான் அவளை "ஸ்ருஷ்டி கர்த்ரீ', "கோப்த்ரீ', "சம்ஹாரிணீ' என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.

தீமைகளை அழித்து, நம்பியவர்களைக் காத்து, சகலவிதமான பிரார்த்தனைகளை நிறைவேற்றவே அம்பிகை வெவ்வேறு இடங்களில் கோயில் கொண்டுள்ளாள். அந்த வகையில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் மிகப் பிரசித்தி  பெற்ற தலமாக பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் தரும், அற்புதத் தலமாக விளங்குகிறது.

ஆதிகாலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் "வேலங்காடு' என்று அழைக்கப்பட்டது இந்த இடம். 

ஒருமுறை ஈசன் தேவர்களின் துன்பம் நீக்கச் சென்றபோது, இறைவன் அம்பிகையிடம் ""நீயே சிவனும், சக்தியுமாகி ஐந்தொழில்களையும் செய்யவேண்டும்!'' என்று கூற, அம்பிகை சம்மதித்து அகத்தியரிடம் தான் ஆட்சி செய்யத் தகுந்த இடம் கேட்க, அகத்தியர் "வேற்காட்டை'க் காட்டுகிறார். மாயாசக்தியான அவளிடம் மகாவிஷ்ணு ""நீ பாம்பு உருவாக புற்றில் இருந்து அருளாட்சி செய். கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவாய்!''”என்று கூற அன்னை கருமாரியாக கருநாக வடிவம் எடுத்து புற்றில் அமர்ந்தாள். அந்தப் புற்று இன்றும் திருக்கோயில் அருகே உள்ளது.

அன்னைக்கு கருமாரி என்று பெயர் வரக் காரணமாக ஒரு புராண நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.

தன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னைக் கொல்லும் என்ற அசரீரி கேட்டு கம்சன் தேவகியைச் சிறையில் அடைத்து, ஏழு குழந்தைகளையும் கொல்கிறான். 

எட்டாவதாக சிறையில் கண்ணன் பிறக்கிறான். கோகுலத்தில் நந்தகோபனுக்கு மாயை பெண்ணாகப் பிறக்கிறாள்.

இருவரையும் இடம் மாற்றிய பிறகு கம்சனுக்குத் தகவல் செல்கிறது. தேவகிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று. கம்சன் அதைக் கொல்லப் போகும்போது மாயை ஆக்ரோஷச் சிரிப்புடன் உயர எழும்புகிறாள். தான் யார் என்பதை அறிவிக்கிறாள். கம்சன் திகைப்புடன் "கரு மாறி!' என்று கூற ஆகாயம், பூமி எங்கும் "கருமாரி!', கருமாரி!' என்று ஒலிக்கிறது.

உக்கிரத்துடன், ஆவேசமாக கையில் திரிசூலத்துடன் நிற்கும் அன்னையை மகாவிஷ்ணு சாந்தப் படுத்துகிறார். 

""தேவி! நீ இந்த உலகை வாழ்விக்கப் பிறந்தவள். உன் கருணையும், அன்பும், கனிவும் மழை போல் இந்த பூமியைக் குளிர்விக்க வேண்டும். தீமைகளை அழித்து, நல்லவர்களைக் காக்க நீ வேலங்காட்டில் குடி கொள்ள வேண்டும். நீ சக்தியின் அம்சம்!'' என்று கூறுகிறார். அன்னை சாந்தமாகி புற்றில் அமர்கிறாள்.

அகத்தியர் அன்னையை வேற்காட்டில் போற்றித் துதித்தது ஒரு தை மாத பெளர்ணமியில்தான். ஆகவே, பௌர்ணமி, பூச நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்கள் இங்கு மிகவும் பிரசித்தமானது. 

இங்கு தனி சந்நிதியில் மரத்தால் செய்யப்பட்ட அன்னையின் சிலை இருக்கிறது. கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக  விளங்குகிறாள்.

இவளுக்குப் பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது, இவள் அக்னி ஜ்வாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள். கடன், வியாதி, வழக்கு, திருமணத்தடை, குழந்தையின்மை என்று அனைத்துவித மனக் குறைகளையும் அன்னை தீர்த்து வைக்கிறாள்.

திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் திருவேற்காடு தலத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். அம்மன், புற்றில் குடியிருந்த இடத்தில்தான் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. புற்று, மஞ்சள் குங்குமம் துலங்க காட்சி  அளிக்கிறது.

விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவகிரகங்கள் எனப் பல தெய்வங்கள் சூழ அம்பிகை கம்பீரமாக வீற்றிருக்கிறாள். சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக இங்கு வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், தேர் இழுத்தல், முடி காணிக்கை, குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை என்று பலவித பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகிறது.

"ஈசனின் கட்டளைக்கிணங்க சக்தி ஐந்தொழில்களையும் செய்யும்போது, சூரியன் அன்னையை அவமதித்ததால் அவனைச் சபித்து ஒளி  குன்றச் செய்தாள் அம்பிகை. சூரியன் இத்தலத்திற்கு வந்து அம்பிகையைப் பூஜித்து, இழந்த தன் ஒளியைப் பெற்றான்!' என்று தல வரலாறு கூறுகிறது.

பிராகாரத்தில் அன்னை ஊஞ்சலில் காட்சி அளிக்கிறாள். பால ரூபத்தில் சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கும் பால பிரத்யங்கிரா தேவிக்கு தனி சந்நிதி இருக்கிறது. அமாவாசையில் இவளுக்கு மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்படுகிறது. பிரதோஷ காலத்தில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை நடக்கிறது. அம்பாளின் சந்நிதியில் ஒரு விளக்கு அணையாமல் எரிகிறது. இதைப் "பதி விளக்கு' என்கிறார்கள்.

அம்பாளையும், இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலுக்கு எதிரில் திருச்சாம்பல் பொய்கை தீர்த்தம் இருக்கிறது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள். அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது.  

கரிய மழைமேகம் போல் அன்னை தன் அருளை வாரி வழங்குவதால் கருமாரி என்றும் பொருள். அவள் வெறும் உருவம் அல்ல. உணர்வு. நம் உள்ளுக்குள் ஓடும் ஓர் உயிர்சக்தி அவள். சகலமுமாகி நின்ற அருள்சக்தி அன்னை கருமாரி. எனவேதான் அவளை,

"காற்றாகி, கனலாகி கடலாகினாய் 
கருவாகி, உயிராகி உடலாகினாய் 
நேற்றாகி, இன்றாகி நாளாகினாய் 
நிலமாகிப் பயிராகி உயிராகினாய்...' 

-என்று  நெகிழ்கிறது கருமாரியம்மன் பதிகம். 

அம்பிகையை வணங்கியவர்களுக்கு என்றும் வெற்றிதான் என்பது பிரபஞ்ச உண்மை..!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com