தேவியின் திருத்தலங்கள் - 30:  பெரியபாளையம்

"ப்ரணம் ரேஷ்வேதேஷு ப்ரஸப  - முபயாதஸ்ய பவனம் பவஸ்யாப் யுத்தாநே தவ - பரிஜநோக்திர் விஜயதே...' 
தேவியின் திருத்தலங்கள் - 30:  பெரியபாளையம்

"ப்ரணம் ரேஷ்வேதேஷு ப்ரஸப  - முபயாதஸ்ய பவனம் 
பவஸ்யாப் யுத்தாநே தவ - பரிஜநோக்திர் விஜயதே...' 

-செளந்தர்ய லஹரி

தங்கை தேவகியின் திருமண வைபவத்தில், அண்ணன் கம்சன் மணமக்களை தேரில் அழைத்து வரும்போது ஓர் அசரீரி ஒலிக்கிறது.

"கம்சனே, தேவகியின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்!'

அதைக் கேட்ட உடனே கம்சன் தன் தங்கை தேவகியைக் கொல்ல முனையும்போது வசுதேவர் அவனிடம் ஓர் உறுதி அளிக்கிறார், "தங்களுக்குப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் அவனிடமே ஒப்படைப்பதாக!'. 

ஆனாலும் கம்சன் அவர்களை நம்பாமல் சிறையில் அடைக்கிறான். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொல்கிறான். எட்டாவதாகப் பிறக்கும் கிருஷ்ணரை, அவர் உத்தரவுப்படி கோகுலத்தில் நந்தகோபர் வீட்டில் வைத்து விட்டு, அவருக்குப் பிறந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு எடுத்து வருகிறார்.

அதிகாலையில் கம்சனுக்குத் தகவல் செல்கிறது. அவன் அந்தக் குழந்தையை அந்தரத்தில் வீசிக் கொல்ல முயலும்போது, அந்தப் பெண் குழந்தை மாயையாக விஸ்வரூபம் எடுத்து, ""கிருஷ்ணன் கோகுலத்தில் வளர்கிறான்!'' என்று கூறி மறைந்தது. 

மாய சக்தியான அந்தப் பெண் குழந்தையே பெரியபாளையத்தில் பவானி அம்மனாக எழுந்தருளியது என்று தல வரலாறு கூறுகிறது.

வளையல் வியாபாரியின் கனவில்: அக்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சில வளையல் வியாபாரிகள் இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள். "வளையல் அணிந்த பெண்கள் செளபாக்கியத்துடன் வாழ வேண்டும்' என்று வளையலுடன் மஞ்சள், குங்குமம் சேர்த்து வழங்குவார்கள். அதுபோல் வியாபாரி ஒருவர் தன் வியாபாரத்தை முடித்து விட்டுத் திரும்பும் போது, இரவு நேரமானதால் ஒரு வேப்ப மரத்தடியில் தங்கினார்.

காலையில் கண் விழித்தபோது, வளையல் மூட்டையைக் காணவில்லை. அருகிலிருந்த புற்றில் மஞ்சள், குங்குமம் இருப்பதைக் கண்டு சந்தேகத்துடன் அதற்குள் எட்டிப் பார்த்தார். அதற்குள் வளையல் மூட்டைக் கிடந்தது.  

பயத்துடன் வீட்டுக்குத் திரும்பிய வியாபாரியின் கனவில் அன்னை தோன்றி, ""நான் அந்தப் புற்றில் இருக்கிறேன்!'' என்று கூற, மறுநாளே வியாபாரி பெரியபாளையம் வருகிறார். 

புற்றை கடப்பாரை கொண்டு இடிக்கும்போது சுயம்பு அம்மனின் மீது பட்டு ரத்தம் பீறிடுகிறது. 

அதிர்ச்சியடைந்த வியாபாரி மஞ்சளால் அந்த இடத்தில் தடவ, ரத்தம் வருவது நின்றது. பின்னர் அவர் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து அம்பிகையை வணங்க, அவரைத் தொடர்ந்து பலரும் வர ஆரம்பித்தார்கள். 

பிற்காலத்தில் அன்னைக்கு கோயில் கட்டப்பட்டது. அம்மனின் மேலிருக்கும் கவசத்தை நீக்கினால், கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும். 

பொதுவாக ஆடி மாதம் அம்பிகைக்கு உரிய மாதமாகும். ஆடி பதினெட்டு, ஆடிப் பூரம், வரலக்ஷ்மி நோன்பு என்பதுடன் அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் அம்பிகைக்கு உகந்தவையாகும். 

எப்போது தோன்றியது என்று உறுதியாகச் சொல்ல முடியாத பழைமையான கோயில். சதாசிவ முனிவர் தவம் செய்து பூமிக்கு வரவழைத்த ஆரணி ஆற்றின் கரையில் மேற்கில் அமைந்துள்ளது.

அன்னை பவானி வலது மேற்கையில் சக்கரமும், இடப்புறம் சங்கு, கீழ்க்கையில் வலப்புறம் வாளும், இடக்கையில் அமிர்த கலசமும் கொண்டு, ஐந்து தலை நாகம் சிரசின்மேல் படம் எடுக்க, அருட்காட்சி அளிக்கிறாள். 

தேவியின் முன்பாக சிறிது பள்ளமான இடத்தில் குழவி வடிவில் காட்சி தரும் சுயம்புவிற்கே அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. சுயம்பு அம்மனுக்கு சிரசில் நாகம் தாங்கிய வெள்ளிக் கவசம் அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.

ஆலய நுழைவுவாயிலில் கணபதி வீற்றிருக்கிறார். அவருக்குப் பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறாள். வள்ளி, தெய்வானை சமேத முருகன், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் சந்நிதிகளும் உள்ளன.

வேப்பிலை ஆடை: பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் வேப்பிலை ஆடை உடுத்தி பிரகாரத்தை வலம் வருகிறார்கள். "வேப்பஞ்சேலை கட்டியவர்களை வேதனை அணுகாது' என்பது நம்பிக்கை. எலுமிச்சம் பழ மாலை அணிவித்தும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

அம்பிகையின் மேல் சாற்றிய மஞ்சளும், அபிஷேக நீரும், தீராத நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. 

அம்பிகையின் முன் நின்று மனம் உருகி, கண்மூடி நின்றால் நம் கவலைகள் யாவும் மறைந்து விடும் என்பது கண்கூடு. 

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ஆடித் திருவிழா மிகப் பிரசித்தம். மீனவ குடும்பத்துப் பெண்கள் "கடலுக்குள் செல்லும் தம் கணவர் நலமாகத் திரும்பி வர வேண்டும்' என்று ஆடிப் பெருவிழா சமயத்தில் அம்பிகைக்கு தங்கள் தாலியைக் காணிக்கையாக்கி, புதுத் தாலியை தன் கணவர் கையால் அணிந்து கொள்கிறார்கள்.

ஆலய வெளிப் பிராகாரத்தில் "சக்தி மண்டபம்' என்று ஒரு சந்நிதி உள்ளது. இங்குதான் ஆதி பவானி தோன்றியதாக கூறப்படுகிறது.

இங்கு அமர்ந்து கண்மூடி, மனம் ஒன்றி தியானம் செய்தால் நாம் நினைப்பது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத்திற்கு வெளியே ஒரு புற்று காணப்படுகிறது. அதை அம்மன் பவானியின் ரூபமாகவே வழிபடுகிறார்கள்.  

தங்கள் பாவங்கள் விலக, வாழ்வின் சோதனைகள் அகல, அங்கப் பிரதட்சணம் செய்யும் வழக்கமும் இங்கு இருக்கிறது. திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இங்கு வந்து வேண்டிய பின்பு, திருமணம் நிச்சயம் ஆனதும், குடத்தாலான கரகம் சுமந்து பிரகாரத்தை வலம் வருகிறார்கள். இது "குடக் கல்யாணம்' என்று அழைக்கப்படுகிறது. குடும்பத்தின் எல்லா மங்கல நிகழ்வுகளையும் இங்கு நடத்துகிறார்கள் பக்தர்கள்.

அம்பிகையின் ரூபம் நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது. வாழ்வின் துயர்களில் சிக்கி, எதிர்மறை எண்ணங்களில் உழலும் நமக்குள் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறாள் அம்பிகை.

அமைவிடம்: சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் அமைந்துள்ளது. சென்னை செங்குன்றத்தில் இருந்தும், ஆவடி, திருவள்ளூர் பகுதிகளிலிருந்தும் பெரியபாளையம் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com