பஞ்ச பூத சக்தி!

ஆதி சங்கரர் வகுத்துக் கொடுத்த ஷண்மத வழிபாடுகளில், அன்னை பராசக்தியை வழிபடும் முறையை "சாக்த வழிபாடு' என்றழைப்பர். 
பஞ்ச பூத சக்தி!
Published on
Updated on
2 min read

++ஆதி சங்கரர் வகுத்துக் கொடுத்த ஷண்மத வழிபாடுகளில், அன்னை பராசக்தியை வழிபடும் முறையை "சாக்த வழிபாடு' என்றழைப்பர். 

சாக்த வழிபாட்டில் மிக முக்கியமானது நவராத்திரி வழிபாடு. ஒவ்வொரு மாதத்திலும் நவராத்திரி வருவதுண்டு என்றாலும் அவற்றில் நான்கு நவராத்திரிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. 

1. பங்குனி - சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி, 2. ஆனி - ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி,  3. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி, 4.  தை மாதத்தில் கொண்டாடப்படும் சியாமளா நவராத்திரி ஆகியவையே அவை. 

வரும் 11.07.2021 -இல் தொடங்கி மொத்தம் 9 நாள்கள் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்னை வராகியை முதன்மைப்படுத்தி இவ்விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம் உண்டு.

ஆனி - ஆடி மாதங்களில்தான் ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். அப்பொழுது விவசாய வேலைகள் துவங்குவதால் விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொள்ளும். அந்த ஆனந்தத்தோடு அவ்வருட விவசாயம் நல்ல பலனைக் கொடுக்கவும்,  உலகம் சுபிட்சமாக விளங்கவும் பூமித்தாயை மனமுருக வேண்டிக்கொள்வர். 

ஆஷாட நவராத்திரியின் மூல தெய்வம் வராகி தேவி. வராகி தேவியானவள் திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர்.  அதில் இரு திருக்கரங்களில் விவசாயத்திற்குரிய கலப்பையையும், உலக்கையையும் கொண்டு விளங்குகிறாள். பூமியை ஆழ உழுவதற்கு ஏற்ற சக்தியை அளித்து  விவசாயத்தைப் பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராகி தேவிக்கு உகந்ததாக இருப்பதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 

வராகி தேவியின் பல வடிவங்களைப் பற்றிப் புராண நூல்கள் போற்றுகின்றன. அவற்றில் மகா வராகி, ஆதி வராகி, சுவப்ன வராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாரூட வராகி, மகிஷாரூட வராகி, அஷ்வாரூட வராகி ஆகிய எட்டு ரூபங்கள் சிறப்பு வாயந்தவை. 

இந்தியாவின் பல பாகங்களில் அன்னைக்குத் திருக்கோயில்கள் உண்டு. காசியில் பாதாள வராகியாகவும், திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி மகா வராகியாகவும், உத்தரமேரூரில் மகா வராகியாகவும், பள்ளூரில் அரசாலை அம்மனாகவும், தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் ஆதி வராகியாகவும், இலுப்பைக் குடியில் சிம்ஹாரூட ரூபியாகவும், பூந்தமல்லியில் மகிஷாரூட தேவியாகவும், நார்த்தாமலையில் ஆதி வராகியாகவும் அம்பிகை அருள்கிறாள். 

"ஐந்து' என்ற எண் வராகிக்கு உரியது. பஞ்ச பூத சக்தி அவள்! அதனால் தங்கள் எண்ணம் நிறவேற, ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வராகியை வழிபட கேட்ட வரம் கிட்டும். 

இத்தேவி சில இடங்களில் எருமை மீதும் ஏறி வருவாள். சில சமயங்களில் நாக வாகனத்திலும் அமர்ந்தருள்வாள் என தேவி பாகவதம் கூறுகிறது. இந்த வராகி தேவி குதிரை மீதேறி வரும்போது அஷ்வாரூட வராகி எனப் போற்றப்படுகிறாள். 

இவள் யுத்த பூமியில் அமர்ந்து வரும் ரதம், "கிரி சக்ர ரதம்' என்றும் இவளின் யந்திரம் "கிரி யந்த்ரம்' என்றும் போற்றப்படுகிறது. (கிரி-பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர் உண்டானது. 

வராகி அம்மனை வழிபடுபவர்கள், வெள்ளை மொச்சைப் பருப்பை நன்றாக வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய் கலந்து நைவேத்தியமாக படைத்து, வணங்கி வர அம்பிகையின் அருள் கிடைக்கும். 

பூமியின் அடியில் விளையும் எல்லா கிழங்குகளும் அம்பிகைக்கு உரியன.

வராகி அம்மனை வணங்குவதால்  எதிரிகளின் தொல்லை நீங்கும். நாவன்மை பெருகும். தொழில் அபிவிருத்தி அடையும். விவசாயம் மகசூல் பெருக அம்பிகை அருள்புரிவாள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருள்பவள் இவள். இவளை வணங்குபவர் இல்லத்தில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கும். 

முடியாது என்று நினைக்கும் காரியங்களையும் நம் உடனிருந்து, மனவலிமை கொடுத்து முடித்து வைக்கும் அளப்பரிய சக்தி கொண்டவள். "ஓம் சியாமளாயை வித்மஹே, ஹல ஹஸ்தாயை தீமஹி, தந்நோ வராஹி ப்ரசோதயாத்'” என்ற காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வராகி தேவியை தினமும் வணங்கி வர வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி வளமான வாழ்வு அமையும்..! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com