31. தேவியின் திருத்தலங்கள்: பாகனேரி புல்வநாயகி அம்மன்

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் வட்டத்தில், பாகனேரி புல்வநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
31. தேவியின் திருத்தலங்கள்: பாகனேரி புல்வநாயகி அம்மன்
31. தேவியின் திருத்தலங்கள்: பாகனேரி புல்வநாயகி அம்மன்"சது: ஷஷ்ட்யா தந்த்ரைஸ்: ஸகல - மதி ஸந்தாய புவநம் 
ஸ்தி தஸ் - தத்தத் ஸித்தி ப்ரஸவ - பரதந்த்ரை: பசுபதி' 

-செளந்தர்ய லஹரி


அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பூலோகத்தில் உள்ள மக்களுக்கு பல தொந்தரவுகள் கொடுத்து வந்தான். அவனால் துன்பத்தில் ஆழ்ந்த மக்கள் அதைப் பொறுக்க முடியாமல், அவனை அழிக்க வேண்டும் என்று ஈசனிடம்  வேண்டினர்.

அதே சமயம், கயிலாயத்தில் அம்பிகை விளையாட்டாய் இறைவனின் கண்களைப் பொத்தினாள். ஈசன் கோபமுற்று, தேவியைப் பூலோகத்தில் பிறக்கச் சொல்லி உத்தரவிட்டார். ஈசனின் கோபத்தில் ஒரு நாடகம் ஒளிந்திருந்தது. "அம்பிகையின் மூலமே அசுரன் அழிக்கப்பட வேண்டும்' என்பது அவரின் சித்தம். ஈசனின் உத்தரவை ஏற்று அம்பிகை பூலோகத்திற்கு வருகிறாள்.

அவளைக் கண்டு கோபமுற்ற அசுரன் அம்பிகையுடன் உக்கிரமாகப் போர் செய்கிறான். அசுரன் பல வடிவங்கள் எடுத்து தேவியை வெல்ல முயல்கிறான். ஆனால்  அம்பிகையின் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. 

இறுதியில், புல் வடிவம் எடுக்கிறான். அம்பிகை உடனே, மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து அவனை அழிக்கிறாள். தேவர்கள் பூமாரிப் பொழிகிறார்கள். 

தேவி, மான் வடிவில் அங்கேயே தங்கி விடுகிறாள். அப்பகுதியில் அழகிய மானைக் கண்ட மக்கள் அதைப் பிடிக்க முயல, தேவி ஓடிச் சென்று பூமிக்குள் மறைந்து விடுகிறாள். 

பல காலங்கள் கழித்து பாகனேரி பகுதி விவசாயிகள் நிலத்தை உழும்போது, அங்கு அம்பாளின் சிலை வடிவம் கிடைத்தது. "புல்வ நாயகி' என்றே பெயர் சூட்டி, அவளுக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். 

அசுரனை அழித்த உக்கிர வடிவ அம்பிகைக்கு இங்கு பஞ்சலோகச் சிலை உள்ளது. ஆனி மாதத் திருவிழாவின் போது உற்சவர் அம்பிகை ஊர்வலம் வந்தாலும், இவளின் உக்கிரமான பார்வை மக்கள் மீது படக்கூடாது என்று  கண்களை பூமியைப் பார்த்தபடி அமைப்பார்கள். உக்கிர அம்பிகையை "சாமுண்டீஸ்வரி' என்கிறார்கள். இவளை, கர்ப்பிணிகள், புதிதாகத் திருமணம் ஆனவர்கள் பார்க்கக்கூடாது என்று ஓர் ஐதீகம் நிலவுகிறது. 

வஜ்ர தீர்த்தம்: இங்குள்ள வஜ்ர தீர்த்தம் மிகச் சிறப்பு வாய்ந்தது. "வஜ்ர கிரீடம்' என்கிற புழு காலப்போக்கில் இறுகி கடினத் தன்மையாக மாறும். அதுவே "சாளக்கிராமம்' எனப்படும் பூஜைப் பொருளாகவும் ஆகிறது. அத்தகைய புழுக்கள் இக்கோயில் தீர்த்தத்தில் வசிக்கின்றன. எனவே, இந்த தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அநீதி இழைக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், பொருள் இழந்தவர்கள் இங்கு வந்து வஜ்ர தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அம்பிகை முன் உள்ள கொடிமரத்தைக் கட்டிக் கொண்டு தங்கள் குறைகளைச் சொல்லி வணங்குகின்றனர். 

அம்பிகை தங்கள் குறைகளைக் கட்டாயம் நீக்குவாள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருக்கிறது. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் திருவிழாவின்போது இங்கு வந்து மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நூதனமான வழிபாட்டு முறை இங்குள்ளது. 

இக்கோயிலில் நெய்கொட்டா மரம் தல விருட்சமாக இருக்கிறது. தல விருட்சத்தின் கீழ் அக்னியாம்பாள் பீடம் இருக்கிறது. இதற்கு மஞ்சள் பூசி, குங்கும அபிஷேகம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நடக்கும் என்பதும் பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். 

அம்பிகை நம் தாய். பூமியில் நாம் வாழும் காலம் வரை சூட்சும ரூபமாக நம்மைக் காப்பவள். எடுக்கும் பிறவிகள்தோறும் நம் அன்னையாக இருப்பவள். நமக்காக அவள் அசுரனை அழிக்கிறாள். நமக்கு வரும் கேடுகளை நீக்குகிறாள். அவளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வது அவளைக் குளிரச் செய்யவே..! அவள் மனம் குளிர்ந்தால் நம் வாழ்வு சிறக்கும்..!

ஆனித் திருவிழா, நவராத்திரி, ஆடிவெள்ளி, தை வெள்ளிக்கிழமைகள் இங்கு  மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. நகரத்தாரால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களின்போது அன்னதானம் அம்பிகையின் பெயரால் நடைபெறுகிறது.

அம்பிகையின் அனைத்துத் தலங்களுமே அவளின் பெருமைகளை உரத்துக் கூறும் சக்தி பீடங்களாகவே அமைந்திருக்கின்றன. அதனால்தான் "தாயே உன் பெருமைகளைக் கூற வார்த்தைகள் போதவில்லை'”என்கிறார் வியாசர். பதினெட்டு புராணங்களை இயற்றிய பிறகும் அவர் மனதில் பூரண திருப்தி இல்லை. அப்போது நாரதரிடம் உபதேசம் பெற்று, "தேவியின் புராணம்' எழுத ஆரம்பித்தார். 

பிரம்மாண்ட புராணத்தில் "லலிதோ பாக்யானம்' என்ற பகுதியில் அம்பிகையின் அவதாரப் பெருமைகளையும், அவளின் ஆயிரம் நாமங்களையும் எழுதிய பிறகுதான் மனத் திருப்தி அடைந்தார்.

தன்னை நம்பி வருபவர்களை அருள்மிகு புல்வநாயகி இருகரம் நீட்டி அணைத்துக் கொள்கிறாள். பசுமையான புல்வெளி நமக்கு மகிழ்ச்சியைத் தருவதைப் போல் அவளும் நமக்கு ஆனந்தத்தைத் தருகிறாள்.

கோயிலுக்கு வெளியே, "கைத்தவக்கால் கணபதி' சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் பைரவர், முனீஸ்வரர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. 

"தாயே! உன் பாதங்கள் தேவலோகத்து கற்பக மரம் போன்றவை. வளரும் இளங்குருத்துப் போல் சோபையுடன் உன் பாதங்கள் விளங்குகின்றன. பாதச் சலங்கைகளின் கணீரென்ற நாதம், தேனீக்களின் ரீங்காரம் போலிருக்கிறது' என்று போற்றுகிறது ஸ்ரீபாலா ஸ்துதி.

அமைவிடம்: சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் வட்டத்தில், பாகனேரி புல்வநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீபுல்வநாயகி அம்மனை சரணாகதி அடைந்தால் அவள் நமக்குத் தேவையான அனைத்தையும் அருள்வாள்..!
(தொடரும்)

படம்: பொ. ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com