கரும்பின் சுவை போல் விளங்கும் இனியன்! 

சோழவள நாட்டில் பல சிறப்புமிகு திருத்தலங்கள் மக்களால் போற்றி வழிபடப் பெறுகின்றன. அவற்றில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு திருத்தலத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்:
கரும்பின் சுவை போல் விளங்கும் இனியன்! 
Updated on
2 min read

சோழவள நாட்டில் பல சிறப்புமிகு திருத்தலங்கள் மக்களால் போற்றி வழிபடப் பெறுகின்றன. அவற்றில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு திருத்தலத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்:

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் வழியில் பட்டவிருத்தி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், வைத்தீஸ்வரன் கோயிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள சிவத்தலம் தலைஞாயிறு. இங்குள்ள "குற்றம் பொறுத்த நாதர்' திருக்கோயில் பிரசித்தி பெற்றதாகும். 

தேவார மூவர் காலத்தில் திருக்கருப்பறியலூர் என்றழைக்கப்பட்ட திருத்தலம்தான் தற்போது தலைஞாயிறாக விளங்குகிறது. 

இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள் புரியும் இறைவன் குற்றம் பொறுத்த நாதர் என்றும், இறைவி கோல்வளை நாயகி என்றும் போற்றப்படுகின்றனர்.  

பெயர்க் காரணம்: சிவனை சந்திக்க ஒருமுறை இந்திரன் மமதையுடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன் முன் தோன்றினார். இந்திரன், ஈசன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் ஈசன் என்றறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் "குற்றம் பொறுத்த நாதர்' என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது. இங்கு இறைவனை வழிபட்டால் சிவபெருமானது அனைத்து வடிவங்களையும் வழிபட்ட பேறு கிடைக்கும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் தம் திருஅடைவுத் திருத்தாண்டகத்தில் தமிழகத்தில் இருந்த பல வகை கட்டட அமைப்புகளை உடைய திருக்கோயில்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அவை : பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில் (கொகுடி - முல்லையில் ஒரு வகை), இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்பனவாகும். அவற்றில் இக்கோயில் "கொகுடிக்கோயில்'  வகையைச் சேர்ந்ததாகும்.

இத்தலத்தில் வீற்றிருந்து அருளும் பெருமான் தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வீடுபேறு அருள்கிறார் என்கிறார் சம்பந்தர் பெருமான். சிவபெருமான் திரிபுராந்தகர், ஆடவல்லான், காலசம்ஹார மூர்த்தி, அர்த்தநாரீசுவரர், காமதகனமூர்த்தி, கங்காதர மூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி என பல்வேறு திருவடிவங்களைக் கொண்டவர் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் என தமது பாசுரத்தில் குறிப்பிடுகிறார். 

மேலும் ஞானசம்பந்தர் பெருமான் தம்பாடலில் இத்தல இறைவனை "குற்றமறியாத பெருமான்' எனக் குறிப்பிடுவதையும் காணலாம்.

சுந்தரர் பெருமான் தில்லையில் ஆடவல்லானை தரிசித்துவிட்டு இத்திருத்தலத்திற்கு வருகிறார். "கூற்றுதைத்தார் திருக்கொகுடிக்கோயில் நண்ணிக்கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி ஏத்தி எல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தில் எய்த  சாற்றிய திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்மாலை புனைந்து' சுந்தரர் திருக்கருப்பறியலூர் இறைவனை வணங்கிய வரலாற்றை பெரியபுராணம் (ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 115-118) புகழ்ந்து பேசுகிறது.

திருக்கருப்பறியலூர் இறைவனை மனதால் நினைத்தாலே அவர் நமக்கு "இனியன்' ஆகிறார் என்று ஒவ்வொரு பாடலின் இறுதியில் இறைவன் சிறப்பை அவர் எடுத்துக் கூறுவதைக் காணலாம்.

தல வரலாறு: இத்தலத்தின் பெருமையை பிரம்மதேவன் வசிட்டருக்குச் சொல்ல, வசிட்டர் இங்கு வந்து லிங்கம் அமைத்து வழிபட்டார். சூரியன் வந்து வழிபட்டதால் தலைஞாயிறு ஆதித்யபுரி- என வழங்கப்படுகிறது. ஆஞ்சநேயர், இந்திரன், ராவணன், ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றவர்கள் என தல வரலாறு கூறுகிறது. 

தலச் சிறப்பு: இக்கோயிலில் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இத்தலம் (கொகுடி) முல்லைக்கோயில் என்றும், முல்லை தலவிருட்சமாக விளங்குவதால் யூதிகாவனம் எனவும் அழைக்கப்படுகிறது. சீர்காழி திருத்தலத்திற்கு மேற்கில் அத்தல அமைப்புடன் விளங்குவதால் "மேலைக்காழி'எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது. சீர்காழியில் இருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் சந்நிதி உள்ளது. இங்கு மலைக்கோயிலில் தோணியப்பர்  உமா மகேசுவரரைக் கண்டு வழிபடலாம். 

இத்தல இறைவனை "நினைத்தாலே அவர் நமக்கு இனியவாறே' என்கிற சுந்தரர் பெருமான் வாக்கால் நாமும் வழிபடுவோம். இனிமையான வாழ்வைப் பெறுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com