தேவியின் திருத்தலங்கள் - 42: இருக்கன்குடி மாரியம்மன்

அம்பிகை அவருக்குத் தரிசனம் தந்தாள். தான் பாா்த்த வடிவத்தை அவா் சிலையாகப் பிரதிஷ்டை செய்தாா்.
தேவியின் திருத்தலங்கள் - 42: இருக்கன்குடி மாரியம்மன்

"உபாப்யா - மேதாப்யா - முதய - விதி - முத்திஸ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநக ஜநநீமத் ஜகதிதம்' 

-செளந்தர்ய லஹரி 

சதுரகிரி மலையில் ஒரு சித்தர் அம்பிகையின் தரிசனம் வேண்டித் தவமிருந்தார். அப்போது அசரீரி ஒன்று அவரை ""அர்ஜுனா நதி, வைப்பாறுக்கு இடையில் உள்ள மேட்டுப் பகுதிக்கு வா!'' என்று உத்தரவிட, சித்தர் அங்கு வருகிறார்.  அங்கு அம்பிகை அவருக்குத் தரிசனம் தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார்.

பிற்காலத்தில் இந்தச் சிலை ஆற்று மணலில் புதைந்து போனது. ஒருநாள் இந்தப் பகுதியில் பசுஞ்சாணம் சேகரித்து வந்த சிறுமி, தனது கூடையைத் தூக்க முடியாமல் தவித்தாள். 

ஊருக்குள் ஓடிப்போய் பெரியவர்களை அழைத்து வந்தாள். அப்போது அந்தச் சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட அம்மன்தான், சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மன். கூடைக்கு அடியில் மண்ணில் புதைந்திருந்த அந்த சிலையைக் கண்டுபிடித்து, அங்கு கோயில் எழுப்பினார்கள்.

பொதுவாக அம்மன் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து, அமர்ந்திருக்கும் தோற்றத்தில் காட்சி அளிப்பாள். ஆனால் இந்த அம்மன், அண்ட சராசரங்களும் எனக்குள் அடக்கம்; உயிர்களின் ஆக்கலும், அழித்தலும் நானே என்பது போல், வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டபடி சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். இந்த அமைப்பே, இங்கு மிகச் சிறப்பு.

இங்குள்ள இரண்டு ஆறுகள் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் அம்பிகை. இவ்விரண்டு ஆறுகளில் நீராடி அன்னையை வழிபடுவதால் சகல வினைகளும் தீரும். மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம் எனது பக்தர்களின் நம்பிக்கை.

"அர்ஜுனா நதி', வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்க மலையில் உற்பத்தியாகிறது. வனவாசம் சென்ற பாண்டவர்கள், எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்து, இந்த மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தனர். 

களைப்பு நீங்க நீராட விரும்பியவர்களுக்கு அங்கு எந்த நீர் நிலையும் இல்லை. எனவே அர்ஜுனன் பூமா தேவியை வேண்ட, அப்போது பூமி பிளந்து, அதிலிருந்து தோன்றியது "அர்ஜுனா நதி'. கோயிலுக்கு வடக்கே ஓடுகிறது இந்த ஆறு.

ராவண சம்ஹாரம் செய்ய தன் பரிவாரங்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு வந்த ராமர், களைப்பு நீங்க நீராட விரும்பினார். அருகில் நீர் நிலைகள் எதுவும் இல்லை. அப்போது ஒருவர், அகத்திய முனிவர் உலகத்து புண்ணிய நதிகளை எல்லாம் ஒரு குடத்தில் அடைத்து, இங்கு புதைத்து வைத்திருப்பதாகக் கூற, குடம் புதைக்கப்பட்ட இடத்தை ராமர் தன் அம்பால் பிளக்க "வைப்பாறு' உண்டானது (வைப்பு என்றால் புதையல்).

கங்கைக்கு நிகரான இரு ஆறுகள் என்ற பொருளில் "இரு கங்கைக்குடி' என்று உருவான பெயர் மருவி, "இருக்கன்குடி' என்று அழைக்கப்பட்டது.

மாரியம்மன் இங்கு சிவாம்சமாகத் திகழ்வதால், அம்மன் சந்நிதிக்கு எதிரில் நந்தி இருக்கிறது. அம்பிகை, சிறுமியால் கண்டறியப்பட்ட அதே இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது. இங்கே அம்பிகையின் திருவடிவம் பொறித்த சூலம் வைக்கப் பட்டுள்ளது.

கோயில் பிரகாரத்தில், வடக்கு வாசல் செல்வி, வெயிலுகந்த அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி அம்மன் ஆகியோரைத் தரிசிக்கலாம். 

இங்கு கரும்புத் தொட்டில் பிரார்த்தனை மிகச் சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து, கரும்புத் தொட்டில் செய்வதாக வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி குழந்தை பிறந்ததும், கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையை வைத்து, சந்நிதியை வலம் வருகிறார்கள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கினிச் சட்டி, அங்கப் பிரதட்சிணம், நேர்த்திக் கடன் செய்கிறார்கள். வயிற்று வலி தீர, மாவிளக்கு ஏற்றுகிறார்கள். இதற்காகத் தனி மண்டபம் உள்ளது. பிரார்த்தனைகளுக்கான பிரதான தலம் இது. கண் நோய் உள்ளவர்கள் "மயானம் இருத்தல்' என்ற விரதம் இருக்கிறார்கள். நோய் தீரும் வரை இங்கே இருப்பவர்களும் உண்டு.

இவர்கள் தங்குவதற்கென தனி மண்டபம் உள்ளது. அம்பிகையின் அபிஷேக தீர்த்தத்தைக் கண்ணில் தடவிக் கொண்டால் கண் நோய் விலகுகிறது என்கிறார்கள் பக்தர்கள். விவசாய நிலம் செழிக்க, கால்நடைகள் நோயின்றி இருக்கவும், இத்தீர்த்தத்தைப் பயன்படுத்துகிறார்கள். அம்மை நோய் உள்ளவர்கள் ஆமணக்கு விதையை காணிக்கையாக அளித்து வழிபடுகிறார்கள். 

 நாம் என்பது உடம்பு, பிராணன், மனம், புத்தி, ஆன்மா என்ற ஐந்து பூதங்களின் தொகுதிதான். இவற்றை தனக்குள் கட்டுப்படுத்தி, இயக்கம் - ஆற்றலாக - உயிராக நம்மில் இருப்பவள் அம்பிகை. அவளின் அம்சமே நம் "ஆன்மா' எனப்படுகிறது. 

"எத்தனையோ தலமீதே உன் நாமம் இசைத்திருந்தும்
அத்தலக் கோயில்கள் போய்ப் பணிந்தாலும் அருள் சிறந்த 
இத்தலம் வந்து பணிந்தவர்க்கே இடர் ஏகுமம்மா 
மத்த மதிச்சடையாய் இருக்கன்குடி மாரிமுத்தே!' 
-என்கிறது இருக்கன்குடி பற்றிய பாடல் ஒன்று.

"அன்னையே! நீ ஆறு சக்கரங்களில் மூலாதாரமான பிருத்வி சக்கரத்தில் ஆனந்த பைரவர், ஆனந்த பைரவி என்னும் வடிவத்தில் எழுந்தருளி இருக்கிறாய். உங்கள் ஆனந்த நடனத்தில், நவரசங்களையும் காட்டுகிறாய். நீ எடுக்கும் வடிவங்கள் அனைத்தும், ஈசனின் பாதியாய் இருந்து பக்தர்களைக் காக்கவே!'- என்கிறார் ஆதிசங்கரர்.இருக்கன்குடி மாரியம்மன், கண் நோய் தீர்த்து, குழந்தை பாக்கியம் மட்டும் தருவதில்லை, வாழ்வில் நாம் வேண்டும் அனைத்தும் செய்கிறாள். நமக்கு எது நல்லதோ அதைத் தருகிறாள்.

அமைவிடம்:  விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் திருத்தலம்! 

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com