திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்!

வைணவம் போற்றும் திருமால் அடியார்களான ஆழ்வார் பெருமக்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் திருப்பாணாழ்வார்.
திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்!


வைணவம் போற்றும் திருமால் அடியார்களான ஆழ்வார் பெருமக்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் திருப்பாணாழ்வார்.

சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் இவர் அவதரித்தார். பாணர் குலத்தில் தோன்றியதால் இவர் "திருப்பாணர்' என்று அழைக்கப்பட்டார். திருவரங்கத்து பெருமானிடம் மிகவும் பக்தி கொண்டு, காவிரியாற்றின் தென்கரையில் நின்று, வீணையை மீட்டிக் கொண்டு பாசுரங்கள் பாடி வந்தார். அவரின் பக்தியால் மகிழ்ச்சியடைந்த அரங்கன், தனக்கு சேவை புரியும் மகா முனிவரான லோகசாரங்கர் என்பவரின் கனவில் காட்சி அளித்து, "பாணரை உம்தோளில் ஏற்றிக்கொண்டு நம்மிடம்  வர வேண்டும்!' என்று பணித்தார். 

அரங்கனின் விருப்பத்தை பாணரிடம் முனிவர் லோகசாரங்கர் தெரிவித்தபோது, பாணர் அதிர்ந்து "உம் தோளில் நான் அமர்வதா?' என்று மறுக்கிறார். பிறகு, அரங்கனின் உத்தரவை அறிந்து கண்ணீர் மல்கினார். லோகசாரங்கர் இறைவனின் கட்டளையை நிறைவேற்றினார். 

பாணர் அரங்கனின் திவ்ய வடிவத்தை "திருவடி முதல் திருமுடி வரை' கண்டு மகிழ்ந்து "அமலனாதிபிரான்' என்ற பிரபந்தத்தைப் பாடியருளினார்.

அமலனாதிபிரான்: இந்தப் பிரபந்தத்தில் 10 பாசுரங்கள் உள்ளன. அரங்கத்து பெருமாளின் திருவடியில் இருந்து திருமுடி வரை தாம் கண்டு அனுபவித்ததை இதில் கூறுகிறார். 

"அரங்கத்து அம்மானின் திருக்கமல பாதம், திருமேனியில் அணிந்திருந்த பீதாம்பரம் என்னும் ஆடை, திருவயிற்றின் மேல் அணிந்திருக்கும் உதரபந்தம் என்ற திரு ஆபரணத்தின் அழகு, பிராட்டியாரான திருமகள் எழுந்தருளி அருள்புரியும் திருமார்பு, அண்டங்கள் அனைத்தையும் அமுது செய்த திருக்கழுத்து, அரவின் மேல் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனின் திருப்பவள வாய், அழகிய மணவாளப் பெருமாளின் திருக்கண்கள், அரங்கத்து அரவின் அணையானவனுக்கு அழகு செய்யும் ரத்தினங்களால் ஆன ஆரமும், முத்து மாலையும், அழகிய நீலத் திருமேனியையும் கண்டு மனம் நிறைவடைந்தது!' என்கிறார்.

திருவரங்கப் பெருமானின் திருவடியில் ஐக்கியம்: "கொண்டல் வண்ணனை, வெண்ணெய் உண்ட வாயனை, உள்ளம் கவர்ந்தானை, அண்டர்கோன் அரங்கனை, இனிய அமுதாக விளங்குபவனைக் கண்ட கண்கள் வேறு எதனையும் காண மாட்டா!' என்று உள்ளம் உருகிப் போற்றுகின்றார். தான் கொண்டிருந்த அளவற்ற பக்தியினாலே திருவரங்கத்து பெருமானின் திருவடிகளில் ஐக்கியமானார். திருவரங்கத்தில் ஆண்டாள் நாச்சியார் ஐக்கியமானதைப் போலவே அரங்கனின் திருவடிகளிலே மறைந்தருளினார் என்பது இவரது பக்தி நிறைந்த வரலாறாகும்.

திருவரங்கம் கோயிலில் ராமாநுஜர் சந்நிதியில் முன் மண்டபத்து விதானத்தில் காணப்படும் ஓவியங்களில் திருப்பாணாழ்வார் வரலாறும் காணப்படுகிறது. நெற்றியில் திருமண் அணிந்து, காவிரியாற்றின் தென்கரையில் யாழை மீட்டியபடி அவர் பாடும் காட்சியும், அடுத்து லோகசாரங்க முனிவருடன் அரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த காட்சியும் இந்த ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது.

அரையர் சேவை: இக்கோயிலில் ரங்க விலாச மண்டபத்தில் விஸ்வரூப அனுமன் சந்நிதியில், திருப்பாணாழ்வார் எழுந்தருளி அருள்புரிவதைக் காணலாம். மார்கழி மாதத்தில் இக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் இடம்பெறும். பகல் பத்து திருவிழாவில், ஐந்தாம் நாள் திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்' பாசுரங்கள் பெருமாள் முன்பு "அரையர் சேவை' அபிநயத்துடன் சிறப்பாக நடைபெறுகிறது.

திருப்பாணாழ்வார் கார்த்திகை மாதத்தில் திருமகளின் வடிவமாகிய ஸ்ரீவத்ஸ அம்சமாக அவதரித்தார். தான் கொண்ட பக்தியினால் எத்தலத்திற்கும் செல்லாமல் திருவரங்கத்துப் பெருமாளின் திருவடிகளில் ஒன்றிய திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்' பாசுரங்களைப் பாடி, திருமாலின் அருளைப் பெற்று வளம் பெறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com