இம்மையில் நன்மை தரும் இறைவன்

திரும்பும் திசையெல்லாம் கோயில்களாக விளங்கும் மாநகரம் மதுரை. புராண முக்கியத்துவம் கொண்ட ஊரில் உள்ள கோயில்களில் சிறப்புமிக்கது.
இம்மையில் நன்மை தரும் இறைவன்

திரும்பும் திசையெல்லாம் கோயில்களாக விளங்கும் மாநகரம் மதுரை. புராண முக்கியத்துவம் கொண்ட ஊரில் உள்ள கோயில்களில் சிறப்புமிக்கது "இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில்'.  பூலோக கைலாயம் என்றும் வழங்கப்படும் இந்தக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.  தல விருட்சம் வில்வ மரம். 

64 திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற திருக்கண் மண்டபமாக விளங்குகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்ற தலங்களுள் இதுவும்  ஒன்று.

சொக்கநாத பெருமான், அன்னை மீனாட்சியைத் திருமணம் புரிந்துகொண்டவுடன்  மதுரை மாநகரின் மன்னராக முடிசூட்டிக் கொள்ள நாள் குறிக்கப்பட்டது. மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் முன் சிவ பூஜை செய்வது வழக்கம். அந்த ஈசன் தானே எல்லாம் என்றாலும்,  வழக்கத்தைக் கைவிடவிரும்பாமல், ஈசன், தன் ஆத்மாவையே இங்கு லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து அதைப் பூஜித்து பின்னரே மன்னராகப் பட்டாபிஷேகம் செய்துகொண்டார் என்கிறது தல புராணம்.  

இதனால், ஆண்டுதோறும் பட்டாபிஷேக உத்ஸவத்தின்போது சொக்கநாதப் பெருமானும் மீனாட்சியும் இத்தலத்துக்கு எழுந்தருள்வர்.  மூலவர், சொக்கநாதர், மீனாட்சி உத்ஸவர்களுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை செய்யப்படும். இந்தப் பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.  வினைப் பயனால் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் துன்பப்படுவோருக்கு நன்மைகளைஅருள்கிறார் இத்தலத்து ஈசன். 

மதுரையில் உள்ள ஐந்து கோயில்களைப் பஞ்சபூதத் தலங்கள் என்கிறார்கள். அவை செல்லூர் திருவாப்புடையார் கோயில் } நீர்த்தலம்.  சிம்மக்கல் } சொக்கநாதர் கோயில் } ஆகாயத் தலம்.  மேலமாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் } நெருப்புத்தலம்.  தெப்பக் குளம் முக்தீஸ்வரர் கோயில் - காற்றுத்தலம். இம்மையில் நன்மை தருவார் கோயில் } மண்தலம்.    இத்தலத்தில் புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் பிடி மண்ணை எடுத்துவந்து வழிபட்டு, பணிகளைத் துவக்குவர். 

மாநகரின் மையத்தில் இந்தக் கோயில் இருப்பதால், அம்பிகையை "மத்தியபுரி நாயகி'  என்றுஅழைக்கிறார்கள். திருமணமாகாதவர்கள் வேண்டிக் கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால், "மாங்கல்யவரப்பிரசாதினி'  என்றும் பெயருண்டு.  தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கற்களால் ஆன ஸ்ரீசக்கரம் உள்ளது. 

அன்னையின் திருச்சந்நிதிக்குப் பின்புறம்அரச மரத்தின் கீழ்லிங்கோத்பவரின் சந்நிதிஅமைந்துள்ளது.   இத்தலத்தில் சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்வது சிறப்புடையது. 

இங்கு சுவாமிக்கு மாலை அணிவித்து வேண்டிக் கொண்டு,  அந்த மாலையைக் கொண்டு வந்து சண்டிகேஸ்வரருக்கு சாற்றி வழிபட்டால்  பிரச்னைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  அதனால் இவரை "பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.

வைகாசி விசாகத்துக்கு மறுநாள் முருகனுக்கு வேண்டிக் கொண்டு பக்தர்கள் பூக்குழி இறங்கும் சடங்கு பிரசித்தம். இத்தலத்தில் ஜுர தேவர் தன்னுடைய மனைவி ஜுரசக்தியுடன் அருள்பாலிக்கிறார்.  உடல்நலமில்லாதவர்கள் இவரை வேண்டிக் கொண்டு ஆரோக்கியம் பெற்றதும், மிளகு சாதம், மிளகு ரசம் ஆகிய பிரசாதங்களைச் செய்து நிவேதனம் செய்கிறார்கள். இங்குள்ள பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். ராவணனிடமிருந்து சீதையை மீட்ட பின்னர்,  ராமர் தனது தோஷம் நீங்க ராமேசுவரத்தில் மணல் லிங்கத்தைப் பூஜித்தார். இந்த நிகழ்வின்அடிப்படையில் இங்கும் அதேபோன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார்.

மாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம்,  வைகாசி விசாகம், ஆவணியில் சிவனுக்குபூஜை,  சிவராத்திரி,  திருக்கார்த்திகை உள்ளிட்ட பூஜைகள் பிரசித்தி பெற்றவை.  இங்கு அதிகமாக ஷஷ்டிஅப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. 

மதுரை பெரியார் பேருந்து நிலையம்,  ரயில் நிலையத்துக்கு மிக அருகில் மேல மாசி வீதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com