ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

வளமும், அருளும் கிடைக்க...

தொடக்கத்தில் சுயம்பு மூர்த்தத்துக்கு சிறு பச்சைப்பந்தல் போட்டு, "கரிவரதராஜப் பெருமாள்' என்ற திருநாமம் சூட்டி வழிபட்டனர்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 11:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாற்கடல்வாசன் திருமால் பூலோகத்தைக் காக்கத் தாம் எழுந்தருளுகின்ற இடத்தை மக்களுக்கு உணர்த்திட, காராம் பசுவை தாமாக முன் வந்து பால் சொரிய வைத்து அடையாளம் காட்டி கோயில் கொண்ட இடங்கள் ஏராளம். அப்படிப்பட்ட தலங்களுள் புன்செய்ப்புளியம்பட்டியும் ஒன்றாகும்.

தொடக்கத்தில் சுயம்பு மூர்த்தத்துக்கு சிறு பச்சைப்பந்தல் போட்டு, "கரிவரதராஜப் பெருமாள்' என்ற திருநாமம் சூட்டி வழிபட்டனர். பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டபோது, நின்ற நிலையில் சுவாமிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதோடு, ராதா }ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டது.

மைசூரு சமஸ்தானத்துக்கும், மதுரை பாண்டிய மன்னரின் சமஸ்தானத்துக்கும் இடையில் இந்தப் பகுதி அமைந்திருந்ததால், இத்தலத்தில் இரண்டு சமஸ்தானமும் பூஜை செலவுகளுக்குக் கொடை அளிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.

கிழக்கு நோக்கிய கோயிலின் முன்பு மிக நெடிதுயர்ந்த தீபஸ்தம்பத்தின் கீழ்ப் பகுதியில் ஆஞ்சனேயர், சங்கு, சக்கரம், கருடாழ்வார் திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.

நுழைவாயிலுக்குத் தென் பகுதியில் தனி சந்நிதியில் விநாயகர் நாகருடன் அருள்பாலிக்கிறார். பலிபீடம், பெருமாளை வணங்கிய நிலையில் கருடாழ்வார், சாளக்கிராமம் அமைந்துள்ளன.

மகா மண்டபத்தில் கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் வீர ஆஞ்சனேயர் சேவை சாதிக்கிறார். அர்த்த மண்டபத்தில் உள்ள இரு சந்நிதிகளில் ஒன்றில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாளும், மற்றொரு சந்நிதியில் ராமர், லட்சுமணர், சீதா தேவி, ஆஞ்சனேயர் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாகக் காட்சியளிக்கின்றனர்.

கருவறையில் நின்ற நிலையில் மேல் இரு கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி, கீழ் இடது கையை இடுப்பிலும், வலது கையை அபய வரதமாகவும் வைத்து சேவை சாதிக்கிறார் மூலவர் கரிவரதராஜப் பெருமாள். தனித் தனி மூர்த்தங்களாக பன்னிரண்டு ஆழ்வார் பெருமக்கள் திருக்காட்சி தருகின்றனர்.

"இந்தக் கோயிலில் வலம்புரி சங்கில் தரப்படும் துளசி தீர்த்தம் உடல் பிணிகளை நீக்கும். தல விருட்சமான வன்னி மரத்தில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வைத்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் நன்மைகள் வந்து சேரும்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புரட்டாசி மாத சனிக்கிழமை

களில் அதிகாலை 4.30 மணியிலிருந்து விசேஷ அபிஷேகம், அலங்காரம் முடிந்து ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் தங்கக் கவச அலங்காரத்தில் ஜொலிப்பார். கிருஷ்ணர் ஜெயந்தி நாளில்

ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாளுக்கும், ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. வேணுகோபால சுவாமிக்கு சுக்கு, மிளகு நைவேத்தியமாகப் படைக்கப்படும்.

விஜயதசமியின்போது இத்தலத்தில் அம்பு சேவைப் பெருவிழா விடிய விடிய நடைபெறும். அப்போது, சூரனை பெருமாள் வதம் செய்யும் நிகழ்ச்சியாக குதிரை வாகனத்தில் வீற்றிருக்கும் கரி

வரதராஜப் பெருமாள், வாழை மரத்தை நோக்கி அம்பெய்துவார். பின்னர் அதிலிருந்த வன்னி இலைகளை எடுத்துச் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதைத் தொடர்ந்து கவாள சேவை நடைபெறும். கார்த்திகை தீபத்தன்று தீபஸ்தம்பத்தின் உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வு விமரிசையாக நடைபெறுகிறது.

சிவராத்திரி அன்று பச்சைப் பயிறு,சுண்டல்,கொள்ளு,தட்டைப் பயிறு போன்ற தானியங்களால் பல்லயம் போடப்பட்டு மாலை சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மாசி மகத்தன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து பாராயணம் முடிந்து வேணுகோபால சுவாமிக்கும் ராதா ருக்மணிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் கருட வாகனத்தில் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பரமபதவாசல் வழியாக கோயிலைச் சுற்றி உலா வருகிறார்.

பெüர்ணமி, ஏகாதசி, சனிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாள்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

தற்போது கும்பாபிஷேக பணிக்காக இந்தக் கோயில் பாலாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், புன்செய்ப் புளியம்பட்டி } அவிநாசி சாலையில் கோவில்புதூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் கோயில் அமைந்துள்ளது.

- காரமடை செ.சு.சரவணகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.