/

தாய்லாந்து குகையில் இருந்து 13 பேரும் மீட்பு: மீட்புக் குழுவைக் கொண்டாடும் மக்கள்

தாய்லாந்தில் வெள்ள நீர் புகுந்த குகைக்குள் கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

News image
Updated On :11 ஜூலை 2018, 5:40 am

PTI


சியாங் ராய்: தாய்லாந்தில் வெள்ள நீர் புகுந்த குகைக்குள் கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

இதையடுத்து, குகைக்குள் சிக்கியவர்களைப் பற்றி கடந்த 17 நாள்களாக உலகம் முழுவதும் நீடித்து வந்த பரிதவிப்பு முடிவுக்கு வந்தது.

குகைக்குள் சிக்கியவர்களை மிக மிக தீவிர முயற்சி எடுத்து, பொருட் செலவு, மனித உழைப்பு என எதையும் பொருட்படுத்தாமல், சிறுவர்களை மீட்க முழு முயற்சி மேற்கொண்ட தாய்லாந்து அரசுக்கும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு சிக்கலான குகைப் பாதையை சிறுவர்கள் கடக்க உதவிய மீட்புக் குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த வெற்றியை தாய்லாந்து மக்கள் இன்று கொண்டாடி வருகிறார்கள். சமூக தளங்களில் இது தொடர்பான தகவல்களையும், பாராட்டு மற்றும் கொண்டாட்ட செய்திகளையும் அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களாக நடந்து வந்த மீட்புப் பணியில் 13 பேரும் பத்திரமாக மீட்கப்படக் காரணமாக மீட்புக் குழுவினரின் அபாரத் திறமைக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

கடந்த மாதம் 23-ஆம் தேதியிலிருந்து குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து வீரரை மீட்பதற்காக கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணியின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு சிறப்பு நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் தாய்லாந்து கடல் அதிரடிப்படையினர் குகைக்குள் செவ்வாய்க்கிழமையும் நுழைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆபத்துகள் நிறைந்த, வெள்ள நீரில் மூழ்கியிருக்கும் மிகவும் குறுகலான குகைப்பாதை வழியாக, அங்கு கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்களையும், 25 வயது கால்பந்து பயிற்சியாளரையும் மீட்புக் குழுவினர் கடும் சிரமத்துக்கிடையில் அழைத்து வந்தனர்.

இதுகுறித்து முகநூல் வலைதளத்தில் தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குகைக்குள் சிக்கியிருந்த வைல்டு போர்ஸ்' கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர்கள் ஆகிய 13 பேரும் மீட்கப்பட்டுவிட்டனர்.

மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவர்களது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.

அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்தது.

அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.

எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.

இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் 9 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்தார்.

பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து கடல் அதிரடிப் படை முன்னாள் வீரர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, குகைக்குள் மேலும் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. மேலும், குகைக்குள் பிராண வாயு (ஆக்ஸிஜன்) அளவும் வெகுவாகக் குறைந்து வந்தது.

இதையடுத்து, அந்த 13 பேரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து, மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை 4 சிறுவர்களும், திங்கள்கிழமை 4 சிறுவர்களும் மீட்டனர். இந்த நிலையில், தற்போது கடைசியாக இருந்த மேலும் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது தாய்லாந்திலும், பிற நாடுகளிலும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


அந்த 17 நாள்கள்...

  • ஜூன் 23: கால்பந்து பயிற்சி முடிந்த கையோடு, தங்களது 25 வயது துணைப் பயிற்சியாளருடன் மிதிவண்டிகளில் புறப்பட்ட வைல்டு போர்ஸ்' கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், தாம் லுவாங் நாங் நான் குகையைப் பார்வையிடச் செல்கின்றனர். யாரும் எதிர்பாராத விதமாக மழை கொட்டித் தீர்க்கிறது. சிறுவர்கள் யாரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
  • 24: அதையடுத்து உள்ளூர் அதிகாரிகள், மீட்புக் குழுவினர் உதவியுடன் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போலீஸார், குகை வாயிலில் கால்பந்து கால்பந்து ஷூக்களும், பைகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
  • 25: குகைக்குள் தேடுதல் வேட்டை தொடர்கிறது. சிறுவர்களின் கைத் தடங்கள் கால் தடங்களை வைத்து பார்த்தபோது, அந்த 13 பேரும் ஆழ்குகைக்குள் சென்றுவிட்டது தெரிய வருகிறது.
  • 26: சிறப்பு கடல் அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுகின்றனர். எனினும், குகைக்குள் வெள்ள நீரும், சகதியும் புகுந்துள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் உள்ளதாக உள்துறை அமைச்சர் அனுபாங் பாவ்ஜிண்டா தெரிவிக்கிறார்.
  • 27: மழை வலுக்கிறது. தேடுதல் வேட்டையில் மேலும் பின்னடைவு ஏற்படுகிறது. அமெரிக்க ராணுவ நிபுணர்கள், பிரிட்டனைச் சேர்ந்த குகைப் பயண நிபுணர்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு தன்னார்வ மீட்புக் குழுவினர் தாய்லாந்தில் குவிகின்றனர்.
  • 28: குகைக்குள் புகுந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சி நடைபெறுகிறது. குகையின் மற்ற வாயில்கள் வழியாகவும் தேடுதல் வேட்டை விரிவுபடுத்தப்படுகிறது.
  • ஜூலை 2: 9 நாள்களாக நடைபெற்ற கடுமையான தேடுதல் வேட்டைக்குப் பிறகு, காணாமல் போன 13 பேரும் பாறை மேடு ஒன்றில் உயிருடன் பதுங்கியிருப்பதை இரு பிரிட்டன் நீச்சல் வீரர்கள் கண்டறிகின்றனர். 
  • 3: சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் பேசும் விடியோ வெளியிடப்படுகிறது.
  • 4: கால்பந்து குழுவினருக்கும் மருந்துகளும், உணவுகளும் அனுப்பப்படுகின்றன.
  • 5: சிறுவர்களுக்கு உள்நீச்சல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • 6: மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடல் அதிரடிப்படை முன்னாள் வீரர், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணம்.
  • 7: அந்தப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்ததையடுத்து, குகைக்குள் சிக்கியவர்களை கூடிய விரைவில் மீட்க வேண்டிய சூழல்.
  • 8: பெரும் போராட்டத்துக்குப் பின், 4 சிறுவர்கள் மீட்பு.
  • 9: மேலும் 4 சிறுவர்கள் மீட்புக் குழுவினரால் மீட்பு
  • 10: குகைக்குள் கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் மீட்பு.
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.