வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை சந்திக்கப் போகிறேன்' என்று டொனால்ட் டிரம்ப் கூறியபோது எந்த அளவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டதோ, அதே அளவுக்கு கடந்த 1971-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் வெளியிட்ட ஓர் அறிவிப்பும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொலைக்காட்சியில் நிக்ஸன் அறிவித்தது இதுதான்: சீன பிரதமர் ஷூ என்லாயின் அழைப்பை ஏற்று, அந்த நாட்டுக்குப் போகவிருக்கிறேன். இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவேன்'
அந்தக் காலத்தில், இந்த அறிவிப்பு உண்மையிலேயே ஆச்சரியத்துக்கு உரியதுதான்.
காரணம், தற்போதைய வட கொரியாவைப் போலவே, சீனாவும் அமெரிக்காவுக்கு வேண்டப்படாத நாடாகத்தான் இருந்து வந்தது.
சீனாவின் கலாசாரப் புரட்சி' ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகளால், உலக அரங்கில் சீனா தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த சீனாவுக்கு அமெரிக்க அதிபர் சென்றது, தற்போதைய டிரம்ப்-கிம் சந்திப்பு அளவுக்கு பரபரப்பாகப் பேசப்பட்டதில் வியப்பேதும் இருக்க முடியாது.
யாரும் எதிர்பாராத வகையில் நடைபெற்ற அதிபர் நிக்ஸனின் வருகை, சீனாவின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டது.
தற்போது, உலகின் மாபெரும் பொருளாதார சக்தியாக சீனா எழுந்து நிற்கிறது.
இவ்வாறு சீனப் பிராந்தியம் செல்வக் களஞ்சியமானதற்கும், உலக அரங்கில் காட்சிகள் மாறியதற்கும் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிக்ஸன் - ஷூ என்லாய் சந்திப்புதான் அடித்தளம் அமைத்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
அதே போல், டிரம்ப் - கிம் இடையே தற்போது நடைபெற்றுள்ளதும் சரித்திரத்தை மாற்றியமைக்கக் கூடிய சந்திப்பாக அமைவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.
ஆசியாவின் கிழக்கே அமைந்துள்ள கொரிய தீபகற்பம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியை ஜப்பானிடமிருந்து விடுவிப்பதற்காக, அப்போதைய போர் கூட்டாளிகளான ரஷியாவும், அமெரிக்காவும் முறையே வடக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து ஜப்பான் படைகள் மீது கடந்த 1945-ஆம் ஆண்டு போர் தொடுத்தன.
இதன் விளைவாக, வடக்குப் பகுதி ரஷியப் படையினராலும், தெற்குப் பகுதி அமெரிக்கப் படையினாலும் விடுவிக்கப்பட்டது. எனினும், அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான பனிப் போர் காரணமாக, கொரிய தீபகற்பம் வட கொரியா, தென் கொரியா என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒரே கொரியாவை உருவாக்கும் நோக்குடன் ரஷியா மற்றும் சீனாவின் உதவியோடு வட கொரியா தென் பகுதி மீது 1950-ஆம் ஆண்டு படையெடுத்தது. அப்போது, தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் போரிட்டன.
பிறகு, 1953-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாற்காலிக சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இந்தக் கொரியப் போர் முடிவுக்கு வந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், தென் கொரியா மற்றும் அதன் பலம் வாய்ந்த கூட்டாளியான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, அணு ஆயுதங்களையும், அமெரிக்கா வரை பாயக் கூடிய தொலைதூர ஏவுகணைகளையும் வட கொரியா உருவாக்கி வந்தது.
கிழக்கு ஆசியப் பிராந்தியம் மட்டுமின்றி, உலக அமைதிக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதன் காரணமாக, வட கொரியா மீது அமெரிக்காவும், ஐ.நா.வும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன. உலக அரங்கில் வட கொரியா தனிமைப்படுத்தப்பட்டது.
இந்தச் சூழலில்தான், 1970-களில் சீன பிரதமர் ஷூ என்லாய் செய்ததைப் போலவை நட்புக் கரம் நீட்டியிருக்கிறார் கிம் ஜோங்-உன்.
நிக்ஸனைப் போலவை, டொனால்ட் டிரம்ப்பும் அந்த நட்புக் கரத்தை இறுகப் பற்றியிருக்கிறார்.
இந்தச் சூழலில், இனி வட கொரியாவும் இன்னொரு சீனாவாகி, அந்த நாட்டின் சரித்திரம் மாறுமா? என்பது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொருத்தே அமையும்.

1972 -இல் நிக்ஸன் - என்லாய் சந்திப்பு
முக்கிய நடவடிக்கை
இரு கொரிய நாடுகளிடையிலான நல்லுறவில் ஆக்கப்பூர்வமான மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக டிரம்ப் - கிம் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
- ஃபெடரிகா மோகரினி,
வெளியுறவுத் துறை அமைச்சர், ஐரோப்பிய யூனியன்
வரவேற்கிறோம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் சந்திப்பை வரவேற்கிறோம். கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும்.
- சுஷ்மா ஸ்வராஜ்,
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
ஆக்கப்பூர்வம்
சிங்கப்பூரில் நடைபெற்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங்-உன் இடையிலான சந்திப்பு, ஆக்கப்பூர்வமானமான ஒரு செயல்பாடாகும்.
- செர்கெய் லாவ்ரோவ்,
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்
தூக்கமே வரவில்லை
டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை வெற்றியடைய தீவிரமாக விரும்பினேன். அவர்களது சந்திப்பை எதிர்பார்த்து எனக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.
- மூன் ஜே-இன்,
தென் கொரிய அதிபர்
வரலாற்றுச் சிறப்பு
சிங்கப்பூரில் நடைபெற்றுள்ள சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த, வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்.
- வாங் யீ,
சீன வெளியுறவுத் துறை அமைச்சர்
முதல் படி
கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றப் பிராந்தியமாக மாற்றுவதற்கு, அதிபர்கள் டிரம்ப்பும், கிம் ஜோங்கும் சிங்கப்பூரில் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கை முதல் படியாகும்.
- ஷின்ஸோ அபே,
ஜப்பான் பிரதமர்
எடுத்துக்காட்டு
போர் முழக்கங்களைக் கைவிட்டுவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் மூலம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் டிரம்ப் - கிம்முக்கு பாராட்டுக்கள்.
- மனோ கணேசன்,
இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


