போர் நிறுத்தத்தை மீறி சிரியாவில் தொடர்ந்து மோதல்: நிவாரணப் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல்
சிரியாவில் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை ஐ.நா. நிறைவேற்றிய பிறகும் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிரியாவில் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை ஐ.நா. நிறைவேற்றிய பிறகும் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கிளர்ச்சியாளர் பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்லவோ, அங்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை வெளியேற்றிக் கொண்டு வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மனித நேயப் பணிகள் விவகாரப் பிரிவு துணை பொதுச் செயலர் மார்க் லோகாக் கூறியதாவது:
சிரியாவில் அரசுப் படையினரின் தாக்குதலால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கிழக்கு கெளட்டா பகுதியில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தாற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் 30 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
இருந்தாலும், குறிப்பிட்ட பகுதி நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போலவே மோதல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானம், சிரியாவில் எப்போது நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கிழக்கு கெளட்டா பகுதியில் டூமா உள்ளிட்ட 10 நகரங்களில் குண்டு வீச்சு மற்றும் முற்றுகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் சொல்வதற்காக லாரிகள் சனிக்கிழம் முதல் காத்திருக்கின்றன.
எனினும், முற்றுகைப் பகுதிக்குச் செல்ல சிரியா அரசின் முறையான அனுமதியும் கிடைக்கவில்லை; அந்தப் பகுதிகளுக்குச் செல்வதற்கான பாதையும் திறக்கப்படவில்லை.
மேலும், ஐ.நா. தீர்மானத்துக்குப் பிறகும் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவரைக் கூட வெளியேற்றி அழைத்து வர முடியவில்லை.
ஆனால், அதற்கு நேர்மாறாக குண்டு வீச்சுத் தாக்குதல்கள் தொடர்கின்றன. உயிர் பலிகளும், மக்கள் காயமடைதலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி கெல்லி க்யூரி, போர் நிறுத்தத்தை சிரியா அரசு மீறி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
எனினும், பொதுமக்கள் வெளியேறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழித் தடங்களில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக ஐ.நா.வுக்கான ரஷியத் தூதர் வாசிலி நெபென்ஸியா குற்றம் சாட்டினார்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கெளட்டா பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
சுமார் 4 லட்சம் பேர் வசித்து வரும் அந்தப் பகுதியை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்தே முற்றுகையிட்டுள்ள அதிபர் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம், கிளர்ச்சியாளர்களிடமிருந்து அந்தப் பகுதியை மீட்கும் நோக்கில் கடந்த 18-ஆம் தேதி முதல் விமானத் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுத் தாக்குதல்களும், ஏவுகணை மற்றும் எறிகணைத் தாக்குல்களும் தீவிரமாக நிகழ்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியது. உயிரிழந்தவர்களில், 120-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கிளர்ச்சியாளர்கள் பகுதியில் 30 நாள் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடந்த சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தச் சூழலில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் 5 மணி நேரப் போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...