பிரான்ஸில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம்: வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்த வைத்தார்.
பிரான்ஸில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம்: வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்த வைத்தார்.
 பிரான்ஸுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வெங்கய்ய நாயுடு 3 நாள் பயணமாக புறப்பட்டார்.
 முதலாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இந்த போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
 இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், "பிரான்ஸில் இந்திய ராணுவத்தின் நினைவுச் சின்னத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
 ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தச் சின்னத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
 போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்து அவர் கூறியதாவது:
 முதலாம் உலகப் போரின்போது ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் இந்தியா அபரிமிதமாக வழங்கியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், அரேபியா, கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து, மெஸபோடாமியா, பாலஸ்தீனம், பெர்சியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய வீரர்கள் போர் புரிந்திருக்கின்றனர்.
 முதலாம் உலகப் போருக்கு பிறகு, பிரான்ஸ் மண்ணுடனும், நாட்டு மக்களுடனும் நாம் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். போரில் உயிரிழந்த நமது வீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் பிரான்ஸின் பெரும்பாலான நகரங்களில் உள்ளன என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
 இதனிடையே, அந்நாட்டில் வசித்துவரும் இந்தியர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, நாயுடு பேசியதாவது:
 இந்தப் போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். 8 லட்சம் இந்திய வீரர்கள் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். பல வீரர்கள் காயமடைந்தனர். வீரதீர செயலுக்காக வழங்கப்படும் 12 மிக உயர்ந்த விருதுகள் உள்பட 13 ஆயிரம் பதக்கங்கள் நமது வீரர்களுக்கு கிடைத்துள்ளன. முதலாம் உலகப் போரால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்று நாயுடு பேசினார்.
 முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து நூறாண்டு நிறைவடைந்ததையொட்டி,
 பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பங்கேற்கவுள்ளார். 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 கடந்த 1914-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி தொடங்கிய முதலாம் உலகப் போர், 1918-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com