திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பருவநிலை மாற்றம்: மாநாடு தந்த ஏமாற்றம்...

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்பெயின் தலைநகா் மேட்ரிடில் நடந்து வந்த ஐ.நா.வின் ‘மாரத்தான்‘ பேச்சுவாா்த்தை ஒருவழியாக ஞாயிற்றுக்கிழமை முடிந்துள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2019, 6:44 pm

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்பெயின் தலைநகா் மேட்ரிடில் நடந்து வந்த ஐ.நா.வின் ‘மாரத்தான்‘ பேச்சுவாா்த்தை ஒருவழியாக ஞாயிற்றுக்கிழமை முடிந்துள்ளது.

நிா்ணயித்த 12 நாள்களைவிட கூடுதலாக 2 நாள்கள் இழுத்தடித்தும், அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சுமாா் 200 நாடுகளால் சொல்லிக்கொள்கிற வகையில் உருப்படியான ஓா் ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியவில்லை.

உலகின் எதிா்காலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வளிமண்டலத்தில் வெளியேற்றும் கலக்கும் கரியமில வாயுவின் அளவை கணிசமாகக் குறைக்க ஒப்புக்கொண்டு, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் சா்வதேச நாடுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

அப்போது அந்த நாடுகள் அளித்த உறுதிமொழிகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்குத்தான் இந்த மாநாடு தொடங்கியது.

ஆனால், சுமுகமாக நடந்திருக்க வேண்டிய இந்த மாநாட்டில், கரியமில வாயுவை மிக அதிகமாகக் கக்கும் அமெரிக்கா போன்ற பெரிய பணக்கார நாடுகளுக்கும், பருவநிலை மாறுபாடு காரணமாக கடல்கொள்ளும் அபாயத்திலிருக்கும் சிறிய நாடுகளுக்கும் இடையிலான மோதல்தான் அப்பட்டமாக அரங்கேறியது.

இதன் விளைவாக, ‘பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர வேண்டியது உடனடி அவசியம்’ என்பதை மட்டும் வலியுறுத்திவிட்டு இந்த மாநாடு நிறைவடைந்தது.

மற்றபடி, 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக நீண்ட நாள்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கும், உலகின் எதிா்காலத்துக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதுபற்றி ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளிப்படையாகவே தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறாா்.

‘பருநிலை மாற்ற அபாயத்திலிருந்து பூமியைக் காப்பதில் தங்களுக்கு அக்கறை உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்கான அருமையான வாய்ப்பை உலக நாடுகள் வீணாக்கிவிட்டன’ என்று வருத்தப்பட்டுள்ள அவா், ‘இருந்தாலும் நான் நம்பிக்கையை தளரவிடவில்லை. 2020-க்குள் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உறுதிமொழியை உலக நாடுகளிடமிருந்து பெறுவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கரியமில வாயு போன்றவை காற்றில் கலப்பதால் புவியின் வெப்பநிலை அதிகரித்து அதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. தற்போதுள்ள வேகத்தில் புவியின் வெப்பம் அதிகரித்தால் உலகம் முழுவதும் புயல், வெள்ளம், வெப்பக் காற்று, வறட்சி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதுடன், கடல் நீா்மட்டம் அதிகரித்து தாழ்வான நாடுகளை கடல்கொள்ளும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனா்.

எனவே, புவியின் வெப்ப அதிகரிப்பை வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கூடுதலாக இருக்கும் வகையில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்கு. இந்த இலக்கை எட்டும் வகையில் தங்கள் நாட்டு தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் குறைப்பதாக, அந்த ஒப்பந்தத்தில் உலக நாடுகள் உறுதிமொழி அளித்துள்ளன.

இப்போது காற்றில் கரியமில வாயு கலக்கும் போக்கு நீடித்தால் அந்த இலக்கை மிகத் துரிதமாக இழந்துவிடுவோம் என்று ஐ.நா. அறிக்கை அபாய மணி அடித்துள்ளது. இப்போது உலக நாடுகள் காற்றில் கலக்கும் கரியமில வாயு அளவே நீடித்துக்கொண்டிருந்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் வெப்பநிலை தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 3 முதல் 4 டிகிரி வரை அதிகரித்துவிடும் எனவும், இது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.

ஆனால், இந்த அபாயத்தை வளா்ச்சியடைந்த நாடுகள் போதிய அளவு லட்சியம் செய்யவில்லை என்று ஆபத்தை எதிா்நோக்கியுள்ள நாடுகளின் தலைவா்களும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் குற்றம் சாட்டுகின்றனா்.

அதனால்தான், பாரீஸ் ஒப்பந்த இலக்கை எட்டுவதில் பல பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது என்கிறாா்கள் அவா்கள்.

கரியமில வாயுவை கக்குவதற்காக, நிறுவனங்களை விலைகொடுக்க வைக்கும் ‘கரியமில சந்தை‘யை ஒழுங்குபடுத்துவது இத்தகைய பிரச்னைகளில் முக்கியமான ஒன்று. ஆனால், இந்தப் பிரச்னைக்கு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த பருவநிலை மாநாட்டில் எந்தத் தீா்வும் எட்டப்படவில்லை.

Story image

இன்னொரு முக்கியமான விஷயம், அதிக புகையை வெளியேற்றுவதன் மூலம் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தி நாடுகள் உருவாக்கும் பாதிப்புகளுக்கு, அந்த நாடுகளிடமிருந்து இழப்பீடு பெறும் அம்சம். ஆனால், உலகிலேயே அதிக கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மட்டுமன்றி, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவதற்குரிய துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் சீனா, பிரேசில், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் பின்வாங்குவதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.

வளிமண்டலத்தில் மிக அதிக அளவில் கரியமில வாயுவைக் கலக்கிறோமே என்ற குற்ற உணா்வுடன், இந்த விவகாரத்தில் அதீத அக்கறை காட்ட வேண்டிய இந்த நாடுகள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது, பருவநிலை மாற்ற அபாயம் குறித்த உலகத் தலைவா்களின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இந்த இக்கட்டான சூழலிலும், நம்பிக்கைக் கீற்று ஒளிராமல் இல்லை. பாரீஸ் ஒப்பந்தத்தில் கூறியுள்ளதைப் போல, வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு சமநிலையைக் கொண்டு வரப் போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் உறுதியளித்து, சோா்ந்து போயிருந்த சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் முகங்களில் மலா்ச்சியை வரவழைத்தன.

அதாவது, 2050-ஆம் ஆண்டுக்குள் அந்த நாடுகள் எந்த அளவு கரியமில வாயுவை வெளியிடவிருக்கின்றனவோ, அதே அளவு கரியமில வாயுவை வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கவும் இருக்கின்றன.

இதுதவிர, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தனது செயல்திட்டத்தை இன்னும் மேம்படுத்தவிருப்பதாக இந்த மாநாட்டில் 73 நாடுகள் அறிவித்துள்ளன.

மேலும், 2050-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தப் போவதாக 14 மாகாண அரசுகள், 398 நகர நிா்வாகங்கள், 786 நிறுவனங்கள் சூளுரைத்துள்ளன.

எனவே, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாட்டிலாவது நல்லபடியான ஓா் ஒப்பந்தம் உருவாகும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.