கடந்த காலத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறார்கள். நிகழ்காலத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் கடந்த காலத்தை நிர்ணயிக்கிறார்கள் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலின் இந்த தத்துவம் யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, சீனாவுக்கு நிச்சயம் பொருந்தும்.
ஏற்கெனவே, சோவியத் யூனியனில் தனது ஆட்சியின் இரும்புப் பிடியை தக்கவைத்துக்கொள்ள அந்த நாட்டு அரசு வரலாற்றை திருத்தி எழுதி வந்தது.
ஆனால், அவர்களது அடியொற்றி நடந்து வரும் சீன அரசோ, இன்னும் ஒரு படி மேலே போய் தங்கள் நாட்டின் மிக முக்கியமான ஒரு வரலாற்று அத்தியாயத்தையே அடியோடு அழித்திருக்கிறது.
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர், இதே ஜூன் 4-ஆம் தேதியில்தான் சீனாவில் எழுந்த ஜனநாயக முழக்கம் துப்பாக்கி குண்டுகளாலும், முரட்டு பீரங்கிகளாலும் நசுக்கப்பட்டது.
ஒற்றைக் கட்சியின் ஏகபோக ஆட்சி நடைபெற்று வரும் சீனாவில், ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், ஊழலை ஒழிக்கவும் வலியுறுத்தி கடந்த 1989-ஆம் ஆண்டில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம், மக்களின் எழுச்சியாக மாறிப் போனது.
இளம் மாணவர்களுடன் சீனத்து பாட்டாளி வர்க்கமும் சேர்ந்துகொண்டது; அவர்களது போராட்டத்தில் பெய்ஜிங் பொதுமக்களும் திரளாகக் குதித்தனர். தலைநகர் ஸ்தம்பித்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தியானன்மென் மைதானம், ஜனநாயக வேட்கை கொண்ட இளைஞர்களாலும், தொழிலாளர்களாலும் நிரம்பி வழிந்தது.
சுமார் 2 மாதங்களுக்கு நீடித்த அந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடக்குவது சீன அரசுக்கு மிகப் பெரிய காரியமாக இருக்கவில்லை. மாணவர்களின் ஒலிபெருக்கிகளை விட அதிக சப்தம் எழுப்பும் துப்பாக்கிகளைக் கொடுத்து, ராணுவத்தை அனுப்பியது சீன அரசு.
மக்கள் குடியரசு ராணுவம் என்ற பெயரளவில் கூறிக் கொள்ளும் சீன ராணுவமோ, மக்கள் போராட்டத்தின் மைய களமாகத் திகழ்ந்த தியானன்மென்னை ரணகளமாக்கியது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நவ நாகரிக காலத்திலும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த நிராயுதபாணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியும், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை புல்டோசர் கொண்டு அழிப்பது போல பீரங்கிகளைக் கொண்டு நசுக்கியும் ஒரு நாட்டின் அரசே படுகொலை செய்தது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது.
சாலையில் அணிவகுக்கும் ராணுவ பீரங்கி வண்டிகளை, தனியொரு இளைஞர் தடுத்தி நிறுத்தி வைத்த படம், சீனர்களது ஜனநாயக வேட்கையின் சின்னமாகி உலக அளவில் பிரபலமானது.

இருந்தாலும், அந்த நாட்டின் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பகுதி யாருக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டுமோ அவர்களிடமிருந்து மட்டும் அது சாதுர்யமாக மறைக்கப்பட்டது.
தியானன்மென் மைதானத்தில் நடைபெற்ற மக்களெழுச்சி போராட்டம் குறித்து, சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருதலைப்பட்ச கருத்துகள் மட்டுமே அந்த நாட்டு இலக்கியத்திலும், இணையத்திலும் விரவிக் கிடக்கின்றன.
பீரங்கிகளை எதிர்த்து நின்ற வீரனின் முத்திரைப் படத்தைக் கூட பெரும்பாலான சீனத்து இளைஞர்கள் பார்த்ததில்லை என்கிற அளவுக்கு அந்த வீர வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
அப்படியே கல்வி நிமித்தம் வெளிநாடுகளுக்கு வரும் சீன மாணவர்களிடம் தியானன்மென் படுகொலை பற்றி பேசினாலும், போனது போகட்டும்.. இனி நடப்பதைப் பார்க்கலாம் என்கிற ரீதியில் அவர்கள் பதில் சொல்கிற அளவுக்கு அவர்களது மனங்களில் அந்தப் போராட்டம் குறித்த எதிர்மறை எண்ணங்கள் விதைக்கப்பட்டுள்ளன.
தியானன்மென் படுகொலை நடந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அந்தச் சம்பவத்தில் எத்தனை பேர் பலியானர்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சீன அரசு இன்றுவரை வெளியிடவில்லை.
இத்தனை ஆண்டுகளில் சீனா பொருளாதாரத்திலும், படைபலத்திலும் விஸ்வரூபம் எடுத்து, சர்வதேச சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறது.
ஆனாலும், தியானன்மென் படுகொலை குறித்து அந்த நாட்டு அரசு மெளனம் சாதிப்பது நீடித்தால், உள்நாட்டில் அந்த போராட்டத்தின் வரலாறு அழிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச அளவில் அந்த போராட்டத்தால் ஏற்பட்ட கறை சீன அரசின் மீது என்றும் அழியாமல் படிந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


