கிளிமாஞ்சரோ சுற்றுலா.. பாராசூட் செயலிழந்ததில் அநியாயமாக உயிரிழந்த சுற்றுலாப் பயணி!

திடீரென அவரது பாராசூட் செயலிழக்கவே நிகழ்ந்த விபத்தில் அத்தனை உயரமான மலைச்சிகரத்தில் இருந்து விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்
கிளிமாஞ்சரோ சுற்றுலா.. பாராசூட் செயலிழந்ததில் அநியாயமாக உயிரிழந்த சுற்றுலாப் பயணி!

மெளண்ட் கிளிமாஞ்சாரோ, கிழக்கு ஆப்ரிக்காவின் தான்சானியாவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களில் ஒன்று. இந்த மலைச்சிகரத்தைப் பற்றித் தெரியாதவர்கள் கூட சங்கரின் ‘எந்திரன்’ திரைப்படத்தில் வரும் கிளிமாஞ்சாரோ பாடலின் பின் நிச்சயம் அதைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பார்கள். ரஜினியும், ஐஸ்வர்யா ராயும் பாடி ஆடும் அந்தப்பாடல் இன்றும் கூட இளைஞர்களின் டாப் டென் லிஸ்டில் இடம்பெறுவதுண்டு.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்தில் அமைந்திருக்கும் மிக உயரமான மலைச்சிகரம் இது.

இங்கு பாராகிளைடிங் மற்றும் வைல்ட்லைஃப் சஃபாரி இரண்டுமே வெகு பிரசித்தம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இரண்டையும் மிஸ் பண்ணுவதே இல்லை. வருடம் தோறும் சுமார் 50,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக் கூடிய இடமாகத் திகழும் இங்கு மேற்சொன்ன இரண்டு சாகஸ விளையாட்டுக்களிலுமே பெரிதாக ஆபத்துக்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. ஆயினும் எப்போதாவது விதிவசத்தில் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக சில விபத்துக்கள் நேர்ந்து விடுவதுண்டு.

அப்படித்தான் கனடாவைச் சேர்ந்த 51 வயது சுற்றுலாப் பயணியான ஜஸ்டின் கைலோ என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று கிளிமாஞ்சரோ மலைச்சிகரத்தில் பாராகிளைடிங் முடித்துவிட்டு தனது பாராசூட் மூலமாக சிகரத்திலிருந்து இறங்க முற்பட்டிருக்கிறார். அச்சமயத்தில் திடீரென அவரது பாராசூட் செயலிழக்கவே நிகழ்ந்த விபத்தில் அத்தனை உயரமான மலைச்சிகரத்தில் இருந்து விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இதை தான்சானியா தேசியப் பூங்காவின் உயரதிகாரிகள் நேற்று ஞாயிறு அன்று உறுதிப்படுத்தினர்.

தான்சானியாவின் முக முக்கியமான வருமானமே சுற்றுலா மூலமாக ஈட்டப்படுவது தான். வருடத்திற்கு 2.5 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டித் தரும் சுற்றுலாத்தொழிலில் இப்படியான விபத்துக்கள் நேர்ந்து சற்றுத் தொய்வு ஏற்படுவது அந்நாட்டை பொருத்தவரை விரும்பத் தகாத அம்சமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com