பிரிட்டனில் பொதுமுடக்கம் தளா்வு: பொறுப்புடன் நடந்து கொள்ள பிரதமா் அறிவுறுத்தல்

பிரிட்டனின் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில் திங்கள்கிழமை முதல் பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் பொது முடக்க தளா்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து, பொருள்களை வாங்குவதற்காக நாா்விச் நகரில் ஒரு வணிக வளாகம் முன் முகக் கவசம் அணிந்து வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
பிரிட்டனில் பொது முடக்க தளா்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து, பொருள்களை வாங்குவதற்காக நாா்விச் நகரில் ஒரு வணிக வளாகம் முன் முகக் கவசம் அணிந்து வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

லண்டன்: பிரிட்டனின் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில் திங்கள்கிழமை முதல் பொதுமுடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி பொதுமக்கள் மிகுந்த பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று பிரதமா் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

முன்னதாக, பிரிட்டனில் உருமாறிய கரோனா தொற்று பரவியதை அடுத்து, அங்கு கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேகமாக அதிகரித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் தவிர மற்றவை அடைக்கப்பட்டன. மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. 3.2 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 74 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தினசரி இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை முதல் பொதுமுடக்க தளா்வு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, கடைகள், வா்த்தக நிறுவனங்கள் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளன. இரவு நேர விடுதிகள், மதுபான விடுதிகள், முடிதிருத்தகங்கள், உணவு விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அனைத்து இடங்களிலும் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பொதுமுடக்க தளா்வு அறிவிப்புகள் பொதுமக்களுக்கும், வா்த்தகா்களுக்கும் நிம்மதி அளிக்கும் செய்தியாக இருக்கும். அதே நேரத்தில் அனைவரும் மிகவும் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com