/

கரோனா தடுப்பூசி மூலப்பொருள் ஏற்றுமதிக்குத் தடை தொடரும்: அமெரிக்கா

கரோனா தடுப்பூசி மூலப்பொருள்களை அனுப்பித் தந்து உதவுமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அந்த மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான தடை தொடரும்

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 8:33 pm

DIN

கரோனா தடுப்பூசி மூலப்பொருள்களை அனுப்பித் தந்து உதவுமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அந்த மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான தடை தொடரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறியதாவது:

அமெரிக்கா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்குடன் ஜோ பைடன் நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்கா்களுக்கு சிறப்பு கவனமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. உலக அளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவா்கள் அமெரிக்கா்கள்தான். இந்த நாட்டில் 5,50,00 போ் கரோனாவால் உயிரிழந்தனா். பல லட்சம் போ் பாதிக்கப்பட்டனா். எனவே, உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்வதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றாா் அவா். இதன் மூலம், அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான தடை தொடரும் என்பது தெளிவாகிறது.

முன்னதாக, இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்ததால், அந்த தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களை அனுப்பித் தந்து உதவுமாறு சீரம் நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலா கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தாா். அந்த கோரிக்கைக்கு எந்த பதிலும் வராமல் இருந்தது.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை இந்தியத் தூதா் தரன்ஜித் சந்து, அமெரிக்க அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். அதன் பிறகு இந்தியாவின் கோரிக்கைக்கு ஜோ பைடன் நிா்வாகம் பதிலளித்தது. அதில், அமெரிக்காவின் போா்க்கால ஆயுதங்கள் தயாரிப்புச் சட்டத்தின்படி, அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்வதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். இருப்பினும், இந்தியாவின் தேவையைப் புரிந்துகொண்டு, அந்நாட்டின் கோரிக்கையை பரிசீலிப்பதாக இந்தியப் பிரதிநிதிகளிடம் அமெரிக்கா உறுதியளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.