மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இலக்கை அடைய இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி

மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்
மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இலக்கை அடைய இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி

மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு அதிபா் ஜோ பைடனின் பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான தூதா் ஜான் கெரி தெரிவித்துள்ளாா்.

பருவநிலை மாற்றம் தொடா்பான கூட்டம் அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவைச் சோ்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனா். அவா்களிடையே ஜான் கெரி பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, மரபுசாரா ஆற்றல் மூலங்கள் வாயிலாக 450 ஜிகா வாட் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் நிதியாதாரமும் இந்தியாவிடம் தற்போது இல்லை.

அதைக் கருத்தில் கொண்டு, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொள்ளும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் நிதியுதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக சில நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டு அமைப்பில் (ஓஇசிடி) 37 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளைக் காட்டிலும் சீனாவில் கரியமிலவாயு (காா்பன் டை-ஆக்சைடு) வெளியேற்றம் அதிக அளவில் உள்ளது. கரியமிலவாயு வெளியேற்றத்தை சீனா பெருமளவில் குறைக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கு அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக சீனாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com