ஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைக்கும் அந்த ஏழு தலிபான்கள் யார்?

அப்போது, அமெரிக்காவால் பயிற்சிபெற்றவர்கள்தான் தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தை விரட்டியடித்துள்ளனர். 
தலிபான்கள்
தலிபான்கள்

பத்து ஆண்டுகளுக்கு மேலாக தலிபான் தலைவர்களின் விவரங்கள் குறித்து வெளியே தெரியப்படுத்தாமல் ரகசியம் காக்கப்பட்டன. 2001ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் படை எடுப்பதற்கு முன்பு கூட சில தலைவர்களின் விவரங்கள் தவிர்த்து அமைப்பு எப்படி செயல்பட்டுவருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்தன.

தற்போது, எதிரிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி மிதவாத அமைப்பாக தன்னை காட்டி கொள்ள தலிபான் முயன்றுவருகிறது. அனைத்து இன மக்களும் அடங்கிய ஆப்கன் அரசை கட்டியெழுப்புவுள்ளதாக உறுதிபட தெரிவித்துள்ளது. ஷரியத் சட்டத்திற்கு ஏற்ப பெண்கள் வேலை புரிய அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தலிபான் அரசை முறையான அரசாக அங்கீகரிக்க இம்மாதிரியான நிபந்தனைகளை அமெரிக்க மற்றும் அதன் கூட்டு நாடுகள் விதித்திருந்தன. 1980களில் பனிப்போரின் போது, ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்த ரஷ்யாவுக்கு எதிராக முஜாஹிதீன் போராளிகள் பலருக்கு அமெரிக்க பயிற்சி அளித்தது. 

அப்போது, அமெரிக்காவால் பயிற்சிபெற்றவர்கள்தான் தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தை விரட்டியடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தென் பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள பஷ்துன் இனத்தவரே தலிபான் அமைப்பில் பெரும்பான்மையினராக உள்ளனர்.

கீழ் குறிப்பிடப்பட்ட ஏழு பேர்தான் ஆப்கானிஸ்தானை ஆட்டிபடைக்கும் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்கள்

ஹைபத்துல்லா அகுந்த்ஸாடா, தளபதி

1961ஆம் ஆண்டு பிறந்த, அகுந்த்ஸாடாதான் தலிபான் அமைப்பின் மூன்றாவது தளபதி ஆவார். கடந்த 2016ஆம் ஆண்டு, டிரோன் தாக்குதல் மூலம் தலிபான் அமைப்பின் முன்னாள் தளபதியை அமெரிக்க கொன்றது. இதனைத் தொடர்ந்து, தலிபான் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றார் அகுந்த்ஸாடா.

அப்துல் கனி பரதர், துணைத் தலைவர்

தலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான முல்லா அப்துல் கனி பராதர், ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபராக பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட முல்லா பராதர், 2018இல் அப்போதைய அதிபர் ட்ரம்பின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க, ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக பராதர் கத்தார் சென்று அங்கு பல மாதங்கள் இருந்தார். பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதிலும், அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முல்லா பல முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் முல்லா முக்கிய பங்காற்றினார்.

சிராஜுதீன் ஹக்கானி, பயங்கரவாதக் குழு தலைவர்

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹக்கானி பயங்கரவாத குழு, 2016ஆம் ஆண்டு தலிபான்களுடன் இணைந்தது. இணைப்புக்கு பிறகு ஹக்கானி அமைப்பின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி, தலிபான் அமைப்பின் இரண்டாவது துணை தலைவராக பொறுப்பேற்றார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள சொத்துகளும் ராணுவ உடைமையகளும் ஹக்கானியின் கண்காணிப்பில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.

புகைப்படங்கள்: ஆப்கனில் நடப்பது என்ன? காபூல் நகர வீதிகளில்...

முகமது யாகூப், தலிபான் நிறுவனர் முல்லா உமரின் மகன்

தலிபான் நிறுவனர் முல்லா உமரின் மகன், முகமது யாகூப். முல்லாவின் மகன் என்பதால் தலிபான் அமைப்பின் அடுத்த தலைவராக யாகூப் வருவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுவந்தது. இஸ்லாமிய மதபோதகர் பயிற்சியை இவர் பாகிஸ்தானில் பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஆப்கானிஸ்தானில் வாழ்ந்துவருகிறார்.

அப்துல் ஹக்கீம் ஹக்கானி, பேச்சுவார்த்தை குழு தலைவர்

தலிபான் தளபதி ஹைபத்துல்லா அகுந்த்ஸாடாவுக்கு, ஹக்கீம் ஹக்கானி நெருக்கமானவராக பார்க்கப்படுகிறார். அமெரிக்க ஆதரவு அரசுடன் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் போது ஹக்கானி தலைமையிலான பேச்சுவார்த்தை குழு கலந்து கொண்டது. மதப் போதகர்கள் குழுவின் மூத்த தலைவராகவும் இவர் உள்ளார்.

ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய், தலிபான் தூதர்

தலிபான் அமைப்பின் மற்ற தலைவர்கள் போல் அல்லாமல், ஸ்டானிக்ஜாய் நல்ல ஆங்கில புலமை பெற்றவர். தலிபான் ஆட்சியில், துணை வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து உலக நாடுகள் முழுவதும் பயணம் செய்தவர். 1996ஆம் ஆண்டு, தலிபான் அரசை அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். இருப்பினும், அது தோல்வியில் முடிவடைந்தது. ஸ்டானிக்ஜாய் தலைமையில்தான் தலிபான் குழு சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஜபிஹுல்லா முஜாஹெட், முக்கிய செய்தித் தொடர்பாளர்

இந்த வாரம் காபூலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தலிபான்கள் சார்பாக பங்கேற்றவர் ஜபிஹுல்லா முஜாஹெட். தலிபான் வெளியிடும் செய்திகளை உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பை வகித்துவருகிறார் முஜாஹெட். கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த போரின்போது, இவர்தான் பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்துவந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com