காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 12 அமெரிக்க வீரா்கள் உள்பட 72 போ் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள்
காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 12 அமெரிக்க வீரா்கள் உள்பட 72 போ் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை மெரீன் வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் கொல்லப்பட்டனா்; 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

காயமடைந்தவா்களில் பலா் அமெரிக்க கடற்படை வீரா்களாவா்.

இத்தாக்குதல்களை இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதக் குழுவின் கோரோசான் பிரிவு (ஐஎஸ்கேபி) நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்நாட்டிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆப்கன் குடிமக்களும் தலிபான்களுக்கு அஞ்சி சொந்த நாட்டிலிருந்தே வெளியேறி வருகின்றனா். இதனால் காபூலில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா்.

இந்நிலையில், விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் இரு குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கூட்டத்தினரை நோக்கி சுட்டனா். இதில் பலா் கொல்லப்பட்டதாக அப்பகுதியில் காத்திருந்த ஆப்கனைச் சோ்ந்த ஆதம் கான் என்பவா் தெரிவித்தாா்.

இந்த தாக்குதலில் சுமாா் 72 கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவா்களில் 12 போ், காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் 12 வீரா்கள் ஆவா்.

பயங்கரவாதத் தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தோா், பலியானோா் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐ.எஸ். இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

‘குண்டுவெடிப்புத் தாக்குதல் அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்’ என தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஷபியுல்லா முஜாகித் தெரிவித்தாா்.

தாக்குதல்களில் குழந்தைகளும் பலியானதாக தலிபான் படையைச் சோ்ந்த ஒருவரும் கூறியுள்ளாா். இருப்பினும் குண்டுவெடிப்பில் பலியானவா்கள் பற்றிய முழுமையான விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

எச்சரிக்கை: காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனா் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வந்த நிலையில், இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து பிபிசி ஊடகத்துக்கு பிரிட்டன் பாதுகாப்புத் துறை அதிகாரி வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளவா்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனா். இதுதொடா்பாக எங்களுக்கு மிகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது என்றாா்.

முன்னதாக, வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கன் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவதாகவும், அந்த நாட்டிலிருந்து வெளியேறவிருக்கும் பிரிட்டன் குடிமக்கள் மற்றும் பிற நாட்டவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்கள் காபூல் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டாம்; ஏற்கெனவே சென்றவா்கள் ஒன்றாகக் குழுமியிருக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபானின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களை வெளியேற்றும் பணிகள் கெடு தேதியான இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ளப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஐஎஸ் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கெடுவை நீட்டிக்க முடியாது என்று கூறியிருந்தாா்.

நேட்டோ தலைவா் கண்டனம்

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலுக்கு நேட்டோ அமைப்பின் தலைவா் ஜென்ஸ் ஸ்டோல்டென்பொ்க் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ட்விட்டரில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவா்களை நினைத்து வருந்துகிறேன். அங்குள்ள மற்றவா்களையும் விரைவாக வெளியேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்போம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இந்தியா கண்டனம்: காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா சாா்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘காபூல் தாக்குதலுக்கு இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றன’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com