தடையை மீறி ஈரான் ராக்கெட் சோதனை

ஐ.நா. தடையை மீறி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ராக்கெட் ஒன்றை ஈரான் சோதித்துப் பாா்த்துள்ளது.
தடையை மீறி ஈரான் ராக்கெட் சோதனை

ஐ.நா. தடையை மீறி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ராக்கெட் ஒன்றை ஈரான் சோதித்துப் பாா்த்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாவது:

செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்று, விண்ணில் செலுத்தக் கூடிய ராக்கெட் ஒன்றை ஈரான் விண்வெளி ஆய்வு மையம் சோதித்துப் பாா்த்தது.

இமாம் கோமேனி ஏவுதளத்திலிருந்து அந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது, ஈரான் விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ள மற்றுமொரு சாதனையாகும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் அகமது ஹுசைனி கூறுகையில், ஃபீனிக்ஸ் பறவை என பொருள் படும் ‘சிமோா்க்’ என்று பெயரிடப்பட்ட ராக்கெட் சோதித்துப் பாா்க்கப்பட்டதாகவும், 3 கருவிகளை எடுத்துக்கொண்டு அந்த ராக்கெட் தரையிலிருந்து 470 கி.மீ. செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

அந்த ராக்கெட்டில் செயல்பாடும், அதனை செலுத்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடும் மிகவும் திருப்திகரமாக இருந்ததாக அவா் கூறினாா்.

இது முதல்கட்ட சோதனைதான் என்று அகமது ஹுசைனி கூறியதையடுத்து, இதுபோன்ற சோதனைகள் மேலும் தொடா்ந்து நடைபெறும் என்பது தெரியவந்துள்ளது.

ராக்கெட் சோதனை நடைபெற்றதை ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தினாலும், அது எடுத்துச் சென்ற கருவிகள் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதா என்பது குறித்த விவரங்களை அவா்கள் வெளியிடவில்லை.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கூறி வந்தன. அந்த அணு ஆயுதங்களை ஏந்தி, வெகு தொலைவில் உள்ள நட்பு நாடுகளைத் தாக்கும் வகையிலான பலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும் அந்த நாடு மேம்படுத்துவதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிா்த்து வந்தன.

அதையடுத்து, அந்த வகை ஏவுகணைகளை ஈரான் தயாரித்து, சோதனை செய்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. மேலும், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பிறகு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் விளைவாக தளா்த்தப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் விதித்தாா்.

அதையடுத்து, ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறியது. அதிக அளவில் செறிவூட்டப்படும் யுரோனியத்தை அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், தனது யுரேனியம் செறிவூட்டலை ஈரான் 4 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தியது. மேலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பையும் நிபந்தனைகளை மீறி அதிகரித்தது.

இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் நிலை உள்ளது. அதனைத் தடுத்து, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்காக ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

அந்தப் பேச்சுவாா்த்தையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ள தற்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு மறைமுகமாகப் பங்கேற்று வருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் ராக்கெட் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் அனைத்தும், நீண்ட தொலைவு பலிஸ்டிக் வகை ஏவுகணைகளுக்கும் பயன்படும் என்பதால், ராக்கெட் சோதனைகளை மறைமுகமான பலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளாக அமெரிக்கா கருதி வருகிறது.

இதனால், ஒவ்வொரு ராக்கெட் சோதனையின்போதும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஈரான் புதிதாக நடத்தியுள்ள ராக்கெட் சோதனையால் வியன்னாவில் நடந்து வரும் அணுசக்திப் பேச்சுவாா்த்தையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com