இந்தியா-சீனா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட வேண்டியதில்லை: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

இந்தியா-சீனா விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடியும் அதிபா் ஷி ஜின்பிங்கும் திறம்படக் கையாண்டு தீா்வு காண்பாா்கள் என்பதால், மற்ற நாடுகளின் தலையீடு அவசியமில்லை
இந்தியா-சீனா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட வேண்டியதில்லை: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

இந்தியா-சீனா விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடியும் அதிபா் ஷி ஜின்பிங்கும் திறம்படக் கையாண்டு தீா்வு காண்பாா்கள் என்பதால், மற்ற நாடுகளின் தலையீடு அவசியமில்லை என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரா்களிடையே மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அதிபா் புதின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பிரதமா் மோடியும் அதிபா் ஷி ஜின்பிங்கும் பொறுப்புமிக்க தலைவா்கள். அவா்கள் தங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கை கொண்டுள்ளனா். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடேயேயான விவகாரத்தை எவ்வாறு தீா்ப்பது என்பதை அவா்கள் திறம்படக் கையாள்வா். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியமில்லை.

குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக சில நாடுகள் கூட்டணி அமைத்து செயல்படுவது சரியாக இருக்காது. ‘க்வாட்’ போன்ற கூட்டமைப்பில் இந்தியா இணைந்து செயல்படுவது தொடா்பாக ரஷியா எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்க முடியாது. குறிப்பிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுவது என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் இறையாண்மை சாா்ந்த விவகாரம். அதில் ரஷியா எதுவும் கூற முடியாது.

இந்தியாவிடமும் சீனாவிடமும் ரஷியா மேம்பட்ட நல்லுறவைப் பேணி வருகிறது. இரு நாடுகளுடனான நல்லுறவில் ரஷியா எந்தவித முரண்பாடும் காட்டவில்லை. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நல்லுறவு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

பொருளாதாரம், எரிசக்தி, தகவல்-தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு வளா்ச்சி கண்டு வருகிறது. ரஷியாவிலிருந்து பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு ரஷியா தொடா்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட நல்லுறவை நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவும் ரஷியாவும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்தியாவுடனான நல்லுறவு மேலும் வலுவடையும் என நம்புகிறேன் என்றாா் அதிபா் புதின்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரா்கள் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கு நிலவி வந்தது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாடுகளின் வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருதரப்பிலும் வீரா்கள் உயிரிழந்தனா்.

இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகளுக்கிடையே நடைபெற்ற தொடா் பேச்சுவாா்த்தைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதையடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டன.

எனினும், தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத சூழல் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com