தலிபான் எதிர்ப்பு படையின் நிலை என்ன? பஞ்சஷேர் பள்ளத்தாக்கில் என்னதான் நடக்கிறது?

எதிர்ப்பு படை வீழ்ந்ததாக தலிபான் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், முன்னான் துணை அதிபர் அம்ருல்லா சலே அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைப்பதில் முனைப்பு காட்டிவரும் நிலையில், காபூலுக்கு வடக்கில் உள்ள பஞ்சஷேர் பள்ளத்தாக்கில் தலிபான் எதிர்ப்பு படையினர் தொடர்ந்து போரிட்டுவந்தனர்.

இதனிடையே, தலிபான் எதிர்ப்பு படையினர் வீழ்ந்ததாக தலிபான் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இந்நிலையில், எதிர்ப்பு படை தலைவர்களில் ஒருவரான முன்னான் துணை அதிபர் அம்ருல்லா சலே அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலிபான் தளபதி கூறுகையில், "அல்லாவின் கருணையில் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானையும் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம். எதிர்ப்பு படையினர் வீழ்த்தப்பட்டுள்ளனர். பஞ்சஷேர் பள்ளத்தாக்கு எங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது" என்றார். 

எதிர்ப்பு படையினர் வீழ்ந்ததாக காபூல் முழுவதும் தலிபான்கள் துப்பாக்கியை வானை நோக்கி சுட்டு வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலிபான் எதிர்ப்பு படையினர் வீழ்ந்ததாக பேஸ்புக்கில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இத்தகவல்கள் உறுதியாகும் பட்சத்தில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் முழுவதிலும் தலிபான்கள் ஆட்சி அமைப்பர். முன்னதாக, 1996 முதல் 2001 வரையிலான தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் முழுவதையும் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை.

 எதிர்ப்பு படை தலைவர்களில் ஒருவரான முன்னான் துணை அதிபர் அம்ருல்லா சலே, தங்களது படை வீழ்ந்து விடவில்லை என தெரிவித்துள்ளார். அம்ருல்லா இதுகுறித்து விளக்கம் அளிப்பது போன்ற விடியோவை பிபிசி பத்திரிகையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "நாங்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். அதில் சந்தேகம் இல்லை. தலிபான்கள் படை எடுத்துள்ளனர். நாங்கள் பின்வாங்கவில்லை. எதிர்த்து வருகிறோம்" என அம்ருல்லா குறிப்பிட்டுள்ளார். 

பஞ்சஷேர் பள்ளத்தாக்கு வீழ்ந்ததாக வெளியான தகவல்களை எதிர்ப்பு படையின் பல்வேறு தலைவர்கள் மறுத்துவருகின்றனர். பள்ளத்தாக்கு பகுதியில் பல தீவிரவாகக் குழுக்கள், பழைய அரசு படைகளுடன் இணைந்து தலிபான்களை எதிர்த்து போரிட்டுவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com