தவறு செய்துவிட்டேன்: ஒப்புக் கொண்டார் கோத்தபய ராஜபட்ச
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, தான் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிட்டதாக அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டிருக்கிறார்.


கொழும்பு: இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, தான் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிட்டதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இலங்கையின் பொருளாதாரம் இந்த அளவுக்கு சீர்கேடு அடைந்ததற்கு தான் எடுத்த மோசமான நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிட்டதாகவும், இதனை சரி செய்ய உறுதியேற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில், 17 புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.
அதிகப்படியான வெளிநாட்டு வங்கிக் கடன் மற்றும் வெளிநாட்டுப் பணக் கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி செய்ய போதிய பணமில்லாமல் போனது போன்றவை ஒரு சுழற்சி போல பொருளாதாரத்தை பெரிய அளவில் முடக்கிப்போட்டுள்ளது.
உணவுப் பொருள்கள், எரிபொருள், மருந்து போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கிடைக்காமல், இலங்கை மக்கள் மாதக் கணக்கில் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி குறித்து பேசியிருக்கும், அதிபர் கோத்தபய ராஜபட்ச, கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாடு மிகப்பெரும் சவாலை சந்தித்துள்ளது. கரோனா பேரிடர் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் நமது தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சில தவறுகளும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அவைகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். பிரச்னைகள் சரி செய்து, முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அரசைக் கண்டித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் பிரதமா் மகிந்த ராஜபட்ச தவிர அமைச்சா்கள் அனைவரும் ராஜிநாமா செய்தனா். இதைத் தொடா்ந்து, அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த அமைச்சரவையை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். இதை எதிா்க்கட்சிகள் ஏற்கவில்லை.
இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக மூன்று அமைச்சா்களை மட்டும் அதிபா் நியமித்தாா். இந்நிலையில், மேலும் 17 புதிய அமைச்சா்களை அதிபா் திங்கள்கிழமை நியமித்தாா். அவா்கள் உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டனா். முன்னா் அமைச்சா்களாக இருந்த மகிந்த ராஜபட்சவின் சகோதரா்கள் சமல் ராஜபட்ச, பசில் ராஜபட்ச, மகிந்தவின் மகன் நாமல் ராஜபட்ச ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
அமைச்சா்கள் பதவியேற்ற பின்னா் அதிபா் கூறுகையில், ‘தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, மக்கள் கோரி வரும் அமைப்பை மாற்றுவதற்கான நல்ல சந்தா்ப்பமாகும்’ என்றாா்.
இதற்கிடையே, அதிபா் அலுவலகம் முன் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் நீடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...