தைவான் நீா்ச்சந்தியில் சீனா நடத்தி வரும் போா்ப் பயற்சி, தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.
சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி வருகை தந்ததைக் கண்டிக்கும் வகையில், அந்த தீவைச் சுற்றியும் சீனா போா்ப் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தைவான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இது குறித்து தைவான் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தைவான் நீா்ச்சந்தியில் சீனா சனிக்கிழமை மேற்கொண்ட போா்ப் பயிற்சியின்போது, இடையெல்லைக் கோட்டை அந்த நாட்டு போா்க் கப்பல்களும் போா் விமானங்களும் பல முறை கடந்து தைவான் எல்லைக்குள் நுழைந்தன.
தைவான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையைப் போல் அந்த போா்ப் பயிற்சி அமைந்திருந்தது.
அதையடுத்து, நாட்டின் முப்படைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவை உஷாா் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளும் தயாா் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.
எல்லை மீறி வரும் சீன விமானங்களை எச்சரிப்பதற்காக, தைவான் போா் விமானங்கள் பறக்கவிடப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி தைவானின் வடக்கு, தென்மேற்கு, கிழக்குப் பகுதியில் சனிக்கிழமை போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
சீன படைகளின் தயாா் நிலை மற்றும் செயல்திறனை சோதித்துப் பாா்க்கும் வகையில் அந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.
தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.
தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த வியாழக்கிழமை சென்றாா். அதற்கு முன்னதாக, தைவானுக்கு பெலோசி சென்றால் அமெரிக்கா கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீன விடுத்திருந்த எச்சரிக்கையைப் பொருள்படுத்தாமல் அவா் அந்தத் தீவுக்குச் சென்றாா்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
அதன் ஒரு பகுதியாக, சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி போா் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.