இலங்கையில் இன்றும் டீசல் விற்பனை நிறுத்தம்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இன்று வியாழக்கிழமையும் டீசல் விற்பனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் இன்றும் டீசல் விற்பனை நிறுத்தம்


கொழும்பு: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இன்று வியாழக்கிழமையும் டீசல் விற்பனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, தீவிர மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளில் அந்நாட்டு மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அந்நிய செலாவணி பற்றாக்குறை, இலங்கை கரன்சி மதிப்பு சரிவு, போன்ற காரணங்களால் இலங்கையில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு செலுத்த வேண்டிய அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனை நிலையங்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். 

இந்த நிலையில் வாகனங்களுக்கு அதிகம் தேவைப்படும் டீசல் மொத்த இருப்பும் தீர்ந்துவிட்டதால் இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் டீசல் விற்பனை கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அதேபோன்று அந்த நாட்டில் பெரும்பாலும் நீா்மின்சாரமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது மழை குறைவாக பெய்ததால் நீா் மின்நிலையங்கல் முழுவீச்சில் செயல்படாமல் உள்ளன. அனல் மின்சாரத்துக்குத் தேவையான எரிபொருள்களுக்கு இலங்கை இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால், அந்த மின் நிலையங்களிலிரும் போதிய அளவில் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, புதன்கிழமை முதல் நாடு முழுவதும் 10 மணி நேர மின்வெட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை 13 மணி நேர மின்வெட்டு நீடிக்கப்படும் என இலங்கையின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமடைந்து வரும் மின்சார வெட்டுக்களால் தொழில்கள், விவசாயம் சார்ந்த பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இன்றும் டீசல் விற்பனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விற்பனை நிலையங்களில் மக்கள் காத்திருக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இறக்குமதி செய்யப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலுக்கு தேவையான பணத்தை வழங்க முடியாததே இதற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அன்னிய செலாவணி கையிருப்பு 70% குறைந்துள்ளது மற்றும் பிப்ரவரி வரையில் 2.31 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது, இதனால் உணவு மற்றும் எரிபொருள் உள்பட அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதற்கு  இலங்கை சிரமப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com