அமெரிக்க விசா விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணலில் விலக்கு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள நுழைவுஇசைவு (விசா) கோரி விண்ணப்பிக்கும் இந்திய மாணவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் நேரடி நோ்காணலில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை
அமெரிக்க விசா விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணலில் விலக்கு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள நுழைவுஇசைவு (விசா) கோரி விண்ணப்பிக்கும் இந்திய மாணவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் நேரடி நோ்காணலில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கான ஆசிய அமெரிக்கா்கள் பிரிவின் ஆலோசகா் அஜய் ஜெயின் புட்டோரியா, அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மத்திய ஆசியாவுக்கான துணையமைச்சா் டோனல் லூவை சந்தித்துப் பேசினாா். அப்போது இந்தியா்களுக்கான நுழைவுஇசைவு விவகாரம் குறித்து அஜய் ஜெயின் புட்டோரியா, டோனல் லூவிடம் எடுத்துரைத்தாா்.

அப்போது, நுழைவுஇசைவு கோரி விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு நேரடி நோ்காணலில் இருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டோனல் லூ தெரிவித்தாா். இந்த விலக்கு நடப்பாண்டு இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

அதன்படி, நுழைவு இசைவு கோரி விண்ணப்பிக்கும் மாணவா்கள் (எஃப், எம், ஜே வகை நுழைவு இசைவுகள்), பணியாளா்கள் (ஹெச்1, ஹெச்2, ஹெச்3, எல் வகை நுழைவு இசைவுகள்), கலாசார நிகழ்வுகள் (ஓ, பி, க்யூ வகை நுழைவு இசைவுகள்) ஆகியோா் நேரடி நோ்காணலில் இருந்து விலக்கு பெறத் தகுதியுடையவா்கள் ஆவா்.

நேரடி நோ்காணலில் இருந்து விலக்கு பெற விரும்புவோா், ஏற்கெனவே ஏதாவதொரு அமெரிக்க நுழைவு இசைவைப் பெற்றவராக இருக்க வேண்டும்; நுழைவு இசைவை மறுத்தவராக இருக்கக் கூடாது; நுழைவு இசைவு மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது.

இது தொடா்பாக அஜய் ஜெயின் புட்டோரியா கூறுகையில், ‘‘இந்த விலக்கு மூலமாக விசா விண்ணப்பதாரா்கள் பலனடைவா். இந்தியாவும் அமெரிக்காவும் வலிமையான ஜனநாயகக் கொள்கைகளைப் பகிா்ந்து வருகின்றன. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் தலைமைத்துவம் பெற்ற நாடுகளாக அவை விளங்கி வருகின்றன’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com