காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் பெற்ற பாகிஸ்தான் வெள்ளம் 

எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் காலநிலை மாற்ற மாநாட்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான விவாதங்கள் கவனம் பெற்றுள்ளன.
எகிப்து மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்
எகிப்து மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்

எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் காலநிலை மாற்ற மாநாட்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான விவாதங்கள் கவனம் பெற்றுள்ளன.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மோசமான வெள்ளத்தால் அந்நாட்டில் 1600க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேலும் 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து பிற பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். பலரது வாழ்வையும் புரட்டிப் போட்ட இந்த வெள்ள பாதிப்பானது காலநிலை மாற்ற விளைவை உலகம் முழுவதற்கும் உணர்த்தியது. 

இந்நிலையில் எகிப்தில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற மாநாட்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

மாநாடு நடைபெறும் ஷார்ம் அல் சேக் நகரின் பல்வேறு பகுதிகளில் உலகத் தலைவர்களின் பார்வைகளில் படும் வண்ணம் பாகிஸ்தான் வெள்ள பாதிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் “பாகிஸ்தானில் நடந்தது பாகிஸ்தானோடு நிற்கப் போவதில்லை” எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

முன்னதாக பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு குறித்து மாநாட்டில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், திடீர் வெள்ளத்தால் ரூ.4000 கோடி மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

பாகிஸ்தானிலிருந்து கலந்து கொண்ட 22 வயதான பரூக் சையது என்னும் இளைஞர் மாநாட்டில் பேசும்போது, “வெள்ள பாதிப்பால் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார இழப்பு குறித்து தெரியவில்லை. ஆனால் இன்றைக்கும் நாங்கள் வெள்ள நீருக்கு மத்தியில்தான் வாழ்கிறோம்.இது மீண்டும் பழைய நிலைக்கு வர சில ஆண்டுகள் தேவைப்படும்” எனக் குறிப்பிட்டார். 

“சில ஆண்டுகளுக்கு முன் காலநிலை மாற்றம் என்றால் என்ன என்பது கூட தெரியாது. ஆனால் அது இன்று எங்களது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் கூட வணிக இழப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது வேதனை தருகிறது” என்றார் 19 வயதான அகமது ரியாஸ்.

உலகின் மொத்த கார்பன் உமிழ்வில் தெற்காசிய நாடுகள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே பங்காற்றும் நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் பாதிப்பை அந்நாடுகள் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய காலநிலை மாற்ற சிக்கல்களுக்கு வளரும் நாடுகள் பலியாக வேண்டிய நிலையில் இந்த இழப்பை தவிர்க்க வளர்ந்த நாடுகள் நிதியாதாரங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com