பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஹசாரா விரைவு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.
பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

சிந்து (பாகிஸ்தான்): பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஹசாரா விரைவு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

தெற்கு பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி ஞாயிற்றுக்கிழமை ஹசாரா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிந்து மாகாணத்தின் நவாப்ஷா மாவட்டத்தில் உள்ள சர்ஹாரி ரயில் நிலையம் அருகே பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் முதலில் 20 பேர் பலியானதாகவும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் விரைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட தடத்தில் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகளின் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கூடும் என்று அஞ்சப்படுகின்றன. மாவட்ட மருத்துவமனைகளில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து பெனாசிராபாத் காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் யூனிஸ் சாண்டியோ கூறுகையில், தடம்புரண்ட 10 பெட்டிகளில் ஒன்பது பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

ரயில் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் உள்ளூர் அதிகாரிகளும் காயமடைந்த பயணிகளை சிந்து நவாப்ஷாவில் உள்ள மருத்துவ மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

சம்பவ இடத்தில் பாகிஸ்தான் ராணுவம், மீட்புப் படையினருடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தின் ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ரயில் விபத்துக்குப் பிறகு சிந்து மாகாணத்தின் உள் மாவட்டங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து செல்லும் ரயில்கள் சேவை துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில்கள் சேவை சீராக 18 மணிநேரம் வரை ஆகலாம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com