ஐ.நா சட்டப் பிரிவு-99 : ஏன் மற்றும் எதற்கு?

ஐ.நா பொதுச் செயலர் அபூர்வ சட்டப் பிரிவான 99-ஐப் பயன்படுத்தியுள்ளார். இது போர் நிறுத்தத்துக்கு உதவுமா?
அன்டோனியா குட்டரெஸ்
அன்டோனியா குட்டரெஸ்

ஐ.நாவின் சட்டப் பிரிவு-99 என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படையில் பொது செயலருக்கு அளிக்கப்பட்டுள்ள விசேஷ உரிமைகளில் ஒன்றாகும். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எதுவொன்றைக் குறித்தும் அவர், ஐ.நா உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவர இதனைப் பயன்படுத்தலாம்.

ஐ.நாவின் உண்மையான அதிகாரம் 193 உறுப்பு நாடுகளிடம் குறிப்பாகச் சொல்லப் போனால் பாதுகாப்பு அவையில் உள்ள 15 நாடுகளிடம்தான் உள்ளது என்றபோதும் கூடுதலான அதிகாரத்தை இந்தப் பிரிவு பொதுச் செயலருக்கு அளிக்கிறது.

முற்றிலும் மனித பேரழிவுக்கான அபாயம் நிலவுவதாக, தற்போதைய பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ் உணர்வதாலேயே இந்தப் பிரிவைக் கையிலெடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் | AP
இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் | AP

அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் பொதுச் செயலரைப் பின்பற்றி போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்திற்கு பாதுகாப்பு அவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இருப்பினும், வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள அமெரிக்கா போர் நிறுத்தத்துக்கு உடன்படாது எனக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அவையின் தீர்மானம் பயனில்லாதது என அமெரிக்கா முன்பு தெரிவித்தது.

1971-ல் அப்போதைய பொதுச் செயலர் யு தான்ட், இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தினார். இந்தியா பாகிஸ்தான் போர் விவகாரத்தை உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவர இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டது. 

இதையும் படிக்க: விரக்தியில் காஸா!

50 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தில்தான் இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரிவைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள கடிதத்தில் இந்தச் சூழல், “இஸ்ரேலின் கடும் குண்டுவீச்சுக்கு மத்தியில், பாதுகாப்பான வீடுகள் இன்றி, வாழத் தேவையான பொருள்களின்றி, விரக்தியான நிலையால் மிக விரைவில் பொது ஒழுங்கு உருக்குலையும் என எதிர்பார்க்கிறேன், மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசேர்ப்பது கூட இயலாத காரியம்” என பொதுச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com