பிரிட்னி ஸ்பியர்ஸ் நினைவுகள் – ஒரே வாரத்தில் 11 லட்சம் பிரதிகள் விற்பனை!

பாப் இசைப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் நினைவுகள் - நூலான த விமன் இன் மி, வெளியான முதல் வாரத்திலேயே  11 லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன.
பிரிட்னி ஸ்பியர்ஸ்!
பிரிட்னி ஸ்பியர்ஸ்!

பாப் இசைப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் நினைவுகள் - நூலான ‘எனக்குள் இருக்கும் பெண்’ – த விமன் இன் மி, வெளியான முதல் வாரத்திலேயே அமெரிக்காவில் மட்டும் 11 லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன.

இந்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘என் இதயத்தையும் ஆன்மாவையும் என் நினைவுகளில் கொட்டியிருக்கிறேன். உலகம் முழுவதுமுள்ள என்னுடைய ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் அவர்களுடைய திடமான ஆதரவுக்காக மிகவும் நன்றியுடையவளாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

முன் பதிவு, அச்சு நூல்கள், மின்னூல்கள், ஒலி நூல்கள் அனைத்தையும் சேர்த்து இதுவரையில் 11 லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன.

கடந்த வாரம் அக். 24 ஆம் தேதி ஸ்பியர்ஸின் ‘எனக்குள் இருக்கும் பெண்’ என்ற இந்த நூல் வெளியிடப்பட்டது.

உலகப் புகழ் பெறும் அளவிலான வளர்ச்சி, அவருடைய தற்போதைய போராட்டங்கள், அவருடைய வாழ்வில் தந்தையின் கட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் குறிப்பிட்டுள்ள இந்த பிரிட்னி ஸ்பியர்ஸின் நினைவுகள் நூல் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கும் முன் ஜஸ்டின் டிம்பர்லேக்குடன் நட்பில் இருந்தபோது தாம் கருக்கலைப்பு செய்துகொண்டது பற்றியெல்லாமும் இந்த நூலில் பிரிட்னி ஸ்பியர்ஸ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

புத்தகம் வெளியான நாளில் தம் நினைவுகளின் தொகுப்பு, வரலாற்றில் மிக அதிக அளவில் விற்ற நூலாக இருக்கும் என்று பிரிட்னி நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், அந்த அளவைத் தொடவில்லை.

இந்த ஆண்டு ஜனவரியில் வெளிவந்த இளவரசர் ஹாரியின் நினைவுகள் – ஸ்பேர் என்ற நூல் முதல் வாரத்தில் 16 லட்சம் பிரதிகள் விற்றன.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வாக்களிக்கப்பட்ட நிலம் – ஏ பிராமிஸ் லேண்ட், அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவின் உருவாதல் – பிகமிங் போன்ற நினைவுகள் நூல் இதைவிட அதிகமாக விற்றிருக்கின்றன.

2007-ல் ஹாரி பாட்டர் வரிசையில் நிறைவு நூலான ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ் நூல் மட்டும் வெளிவந்த 24 மணி நேரத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com