நெதர்லாந்து தேர்தலில் வலதுசாரி தலைவர் வெற்றிமுகம்!

நெதர்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், வலதுசாரி தலைவரான கீர்ட் வில்டர்ஸ் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
நெதர்லாந்து தேர்தலில் வலதுசாரி தலைவர் வெற்றிமுகம்!

ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்தில்(டச்சு) நடைபெற்ற பொதுத்தேர்தலில், வலதுசாரி தலைவரான கீர்ட் வில்டர்ஸ் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

ஐரோப்பிய தேசமான நெதர்லாந்தில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் அந்நாட்டு அரசுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளனர். பூதகரமாக  உருவெடுத்த  இப்பிரச்னையால், நெதர்லாந்தில் மார்க் ரூட் தலைமையில் இருந்து வந்த  கூட்டணி ஆட்சி கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமராக இருந்த மார்க் ரூட் ராஜிநாமா செய்தார்.

மேலும், நெதர்லாந்தில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி, வீடுகள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளும் ஒவ்வொன்றாக தலைதூக்க தொடங்கின. 

இந்த நிலையில், நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் மொத்தமுள்ள 150 இடங்களுக்கு புதன்கிழமை (நவ. 22)  வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று (நவ.23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, வலதுசாரி தலைவரான கீர்ட் வில்டர்ஸின் ‘பார்ட்டி ஃபார் ஃப்ரீடம்’ கட்சி  மொத்தமுள்ள 150 இடங்களில் 37 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே, தனது தலைமையில் ஆட்சி அமைக்க, பிற வலதுசாரி மற்றும் நடுநிலைமை கட்சிகளின் ஆதரவை வில்டர்ஸ் கோரியுள்ளார். ஆனால், வலதுசாரி கொள்கை கொண்டுள்ள நபருடன் கைகோர்க்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. 

இந்தநிலையில், நாளை (நவ. 24) முதல் புதிய கூட்டணி அரசு அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதுதொடர்பாக, அரசியல் கட்சிகள் பலவும் தனித்தனியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. 

நெதர்லாந்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், வில்டர்ஸின் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல்  ஆட்சியமைக்க முடியாத சூழலுக்கு பிற அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.     

முன்னதாக கடந்த முறை தேர்தலில் வில்டர்ஸின் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் காலங்காலமாக நடுநிலைமைக் கட்சிகளே வெற்றி பெற்று வந்த நிலையில், வில்டர்ஸ் பெற்றுள்ள முன்னிலையை, ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி கலந்த கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன.
        
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நெதர்லாந்து விலக நடவடிக்கை எடுக்கப்படும், எல்லைகளில் குடியேறியுள்ள அகதிகள் வெளியேற்றப்படுவார்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் அளித்திருந்தார்.

அதிலும் நெதர்லாந்திலிருந்து இஸ்லாமிய மதம் வெளியேற்றப்படும் என்று பேசியிருந்த வில்டர்ஸ், தொடர்ந்து இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுத்து வந்தார். தான் பிரதமரானால், நெதர்லாந்தில் மசூதியோ இஸ்லாமிய பள்ளிக்கூடங்களோ இருக்காது என்பதையும் தேர்தல் வாக்குறுதியாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

எனினும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில், நெதர்லாந்திலுள்ள அனைத்து மக்களுக்குமான பிரதமராக தான் செயல்படுவேன் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே, நெதர்லாந்தின் அண்டை  நாடான ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் உள்பட பல வலதுசாரி தலைவர்களும், வில்டர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்லோவாக்கியா, ஸ்பெயின் தொடங்கி  இத்தாலி, ஜெர்மனி, போலந்து வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், வலதுசாரி கட்சிகளின் கரங்கள் ஓங்கத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் இப்போது நெதர்லாந்தும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com