
வாடிகன் : போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் துபையில் நடைபெறும் ஐ.நா.அவையின் உலக காலநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் 87 வயதை நிறைவுசெய்ய உள்ள போப் பிரான்சிஸுக்கு, இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒருவாரமாக அவர் நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் மருத்துவர்கள் பரிந்துரையை ஏற்று, போப் ஆண்டவரின் துபை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வாடிகன் செய்தித்தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி கூறியதாவது, “போப் பிரான்சிஸ் காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் வீக்கம் ஆகிய பாதிப்புகளிலிருந்து குணமாகி உடல்நலம் தேறி வருகிறார்” என்று நம்பிகையுடன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு, காங்கோ மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், மூட்டு வீக்கம் காரணமாக போப் பிரான்சிஸின் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நுரையீரல் தொற்றால் போப் பிரான்சிஸ் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.