எல்லை தாண்டும் போர்ப் பதற்றம்! தெற்கு லெபனானிலிருந்து வெளியேறும் மக்கள்!

இஸ்ரேலின் ஏவுகணைகளுக்குப் பயந்து ஆயிரக்கணக்கிலான லெபனான்  மக்கள் தெற்குப் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
லெபனான் எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்
லெபனான் எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர்ப் பதற்றம் எல்லைகளைத் தாண்டியும் விரிவடைகிறது. லெபனானைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது கடந்த புதன்கிழமை தாக்குதலில் ஈடுபட்டது.

அதிகாரபூர்வமாக ஹிஸ்புல்லா போரில் இணையவில்லை எனினும் இஸ்ரேலிய இராணுவத் தளத்தின் மீதும், ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் கருவி மீதும் தாக்குதலை நிகழ்த்தியது, ஹிஸ்புல்லா. இஸ்ரேல்  திருப்பித் தாக்கியதில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.  

போர் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை முதல் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.  கைவிடப்பட்ட பகுதிகளாக லெபனானின் தெற்கு எல்லை காட்சியளிக்கிறது.

இஸ்ரேலால் தாக்கப்பட்ட லெபனான் கிராமம்
இஸ்ரேலால் தாக்கப்பட்ட லெபனான் கிராமம்

லெபனானின் மக்கள்தொகை 60 இலட்சம். தனது தெற்கு எல்லையில் 81 கி.மீ.  நீளத்துக்கு  இஸ்ரேலுடன் பகிர்ந்துகொள்கிறது. ஏறத்தாழ 6 லட்சம் பேர் இந்தத் தெற்கு எல்லைப் பகுதிகளில் வசிக்கின்றனர். 1948-ல் இஸ்ரேல் உருவான காலம் முதல் போரில் லெபனான் சம்பந்தப்பட்டிருக்கிறது. 2006-ல் இரு  நாடுகளுக்கு இடையே நடந்த சண்டைக்குப் பிறகு, அவ்வப்போது மோதல்கள் நடந்தாலும் ஒப்பீட்டளவில் அமைதியாகவே இருக்கிறது.

 மீண்டும் போர் உருவானால் 2006 பாதிப்பைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. அந்த மோதலில் 1,109 லெபனான் பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண மக்கள்.

இன்றைக்கு லெபனானில் நிலவுகிற பொருளாதார சூழல் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. 80 சதவீத மக்கள் தொகை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக தெற்கு லெபனானில் அடிப்படை சம்பளம் மிகக் குறைவு, தனியார் நிறுவனங்கள் எதுவும் சிறியளவில் கூட கிடையாது. பெரும்பாலான மக்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். எந்த வகையிலும் இன்னொரு போரை எதிர்கொள்ளும் நிலையில் லெபனான் இல்லை.

ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா தன்னிடம் 1,00,000 ஆயுதம் தாங்கிய வீரர்கள் உள்ளனர் எனத் தெரிவித்தது. இஸ்ரேல் லெபனானை மீண்டும் கற்காலத்திற்கு அனுப்பிவிடுவதாக எச்சரித்தது. 

அந்தக் கேள்வி எழுந்தபோது ஏற்கெனவே கற்காலத்தில்தானே  இருக்கிறோம் என்பதே லெபனான் மக்களின் பதிலாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com