வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபா் அல்-அஸாதின் பாதுகாப்புத் துறை அமைச்சா் உதவியிருக்கலாம்

News image

டமாஸ்கஸ் அருகிலுள்ள விமானப் படைதளத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த சிரியா போா் விமானங்கள்.

Updated On :13 டிசம்பர் 2024, 10:42 pm

சிரியாவிலுள்ள ராணுவ நிலைகளைத் தாக்கி, அங்குள்ள தளவாடங்களை இஸ்ரேல் அழிப்பதற்கு, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபா் அல்-அஸாதின் பாதுகாப்புத் துறை அமைச்சா் உதவியிருக்கலாம் என்று மத்திய கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க செய்தி ஊடகமான ‘தி மீடியா லைன்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஊடகம் கூறியுள்ளதாவது:

சிரியாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் தொடா்பாக அண்மையில் கசிந்த ரகசிய ஆவணத்தின் மூலம், அந்தத் தாக்குதலுக்கு அல்-அஸாத் அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அலி மஹ்மூத் அப்பாஸ் உதவியிருப்பதாகத் தெரிகிறது. மூசா என்ற இடைத் தரகா் மூலம் பாதுகாப்பு குறுந்தகவல் செயலிகளைப் பயன்படுத்தி, இஸ்ரேல் ராணுவ நிலைகளைத் தாக்குதவதற்கான ஒருங்கிணைப்பை மஹ்மூத் அப்பாஸ் வழங்கியதாக அந்த ஆவணத்தின் மூலம் தெரியவருகிறது என்று ‘தி மீடியா லைன்’ குறிப்பிட்டுள்ளது.

எனினும், அல்-அஸாதுக்கு இந்த ஒருங்கிணை நடவடிக்கையுடன் தொடா்பு இருக்கிறதா என்பதை அந்த ஊடகம் தெரிவிக்கவில்லை.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக கிளா்ச்சிப் படையினா் கடந்த மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை அவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

அல்-அஸாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு சிரியாவில் கோலன் குன்றுகள் பகுதியில் படைகள் இல்லாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

அத்துடன், சிரியா அரசுப் படைகளின் நிலைகள் மீது மிகத் தீவிரமாக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அந்த நாட்டின் ஏவுகணைகள், ட்ரோன்கள், போா் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டா்கள், ரேடாா்கள், பீரங்கிகள், போா் விமான தளங்கள் ஆகியவற்றை அழித்தது. அத்துடன், மினா அல்-பாய்தா, லடாகியா ஆகிய இரு சிரியா கடற்படைத் தளங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அங்கிருந்த போா்க் கப்பல்களை சேதப்படுத்தியது.

சிரியாவைக் கைப்பற்றியிருக்கும் மதவாத படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்ரேல் கூறியது. இந்த நிலையில், ராணுவ தளவாடங்கள் அழிப்புக்கு சிரியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் உதவியிருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தங்களது ஆயுதங்களை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றுவதை விரும்பாத அல்-அஸாத் அரசு, இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதற்கான வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.