லூயிஜி மஞ்ஜானியை கொலையாளியாக்கிய ஸ்போண்டிலோசிஸ் என்ற கீல்வாதம்

அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலையில் கைதான லூயிஜி மஞ்ஜானியை பாதித்த ஸ்போண்டிலோசிஸ் என்ற கீல்வாதம் பற்றி
லூயிஜி மஞ்ஜானி
லூயிஜி மஞ்ஜானிPamela Smith
Published on
Updated on
2 min read

ஒரு அங்குல இடைவெளி பெரிதாக என்ன செய்துவிடக்கூடும். ஆனால், லூயிஜி முதுகெலும்பில் இருக்கும் 33 எலும்புகளும் இருக்க வேண்டிய சரியான அளவில் இல்லாமல் அரை அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிக்குள் வந்ததால், அவரது வாழ்வே முடங்கியது.

அவரது கால்கள் தீயில் எரிவது போல வலியை உணர்ந்தார். முதுகு மற்றும் அடிவயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர்தான், காப்பீட்டு நிறுவன தலைமை செயல் அலுவலரை சுட்டுக்கொலை செய்திருக்கிறார்.

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் அலுவலர் பிரையன் தாம்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்தான் லூயிஜி மஞ்ஜானி. பொறியியல் பட்டதாரியான இவர் தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி மிகச் சிறப்பான தனது எதிர்காலக் கனவுகளுடன் இருந்த நிலையில்தான், கொலையாளியாக மாறி, நீதிமன்றத்தில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்நோக்கி நின்றுகொண்டிருக்கிறார்.

இந்த கொலை வழக்கில் லூயிஜி மஞ்ஜானி கைது செய்யப்பட்ட பிறகு, அவரது சமூக வலைதளங்கள் மூலமாக அவரது வாழ்முறையை ஊடகங்கள் தேடின. அதில்தான் அவருக்கு பிறப்புமுதலே இருந்த உடல்நலக்குறைவு, 2022ஆம் ஆண்டு நேரிட்ட சாலை விபத்தால் மோசமாகி, அதனால் ஸ்போண்டிலோசிஸ் எனப்படும் கீல்வாதம் பாதித்ததன் பின்னணியை அறியச் செய்தது. ஸ்போன்டிலோசிஸ் என்ற கீல்வாதத்தால் வெறும் முதுகுவலி மட்டுமல்ல, மூளை மந்தநிலை, உடலில் கால்சியக் குறைபாடும் ஏற்படக்கூடும் என்கின்றன சமூக வலைதளப் பதிவுகள்.

பொதுவாக கீல்வாதம் எனப்படும் முதுகெலும்பின் வரிசைகிரயத்தில் மாறுபாடு ஏற்பட பலக்காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு சிசுவாக வயிற்றில் இருக்கும்போதே முதுகெலும்பு சரியான முறையில் வளர்ச்சியடைந்திருக்காது. சிலருக்கு விபத்துகள், கீழே விழும்போது ஏற்படும் திடீர் தாக்குதல் போன்றவற்றால் அதன் வரிசையில் மாற்றம் நேரிடலாம்.

இந்த கீல்வாதம், முதுகெலும்பின் எந்த இடத்தில் நேரிட்டாலும், அங்கிருக்கும் நரம்புகளையும் சேர்த்தே அது பாதிக்கும். இதனால், கடுமையான வலி நேரிடும். நரம்புகள் முதுகெலும்பின் வரிசைக்குள் சிக்கிக்கொள்ளும்போது அந்த வலியானது முழு இடுப்பு அல்லது முழு காலுக்கும் பரவும். ஊசியைக் கொண்டு ஒட்டுமொத்த உடல் பாகத்தையும் குத்துவதைப் போன்ற வலியை அது கொடுக்கும் என சமூக ஊடகங்களில், நோயால் பாதிக்கப்பட்ட பலரும் பகிர்ந்திருக்கிறார்கள்.

மீண்டும் லூயிஜி மஞ்ஜானி விஷயத்துக்கு வருவோம், இந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளின்போது லூயிஜி மஞ்ஜானி எதிர்கொண்ட மருத்துவ செலவு மற்றும் காப்பீடு தொடர்பான சவால்களும் அது கொடுத்த மோசமான அனுபவங்களுமே அவரை இன்று கொலையாளியாக மாற்றியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில்தான், அமெரிக்காவின் கடுமையான காப்பீட்டுத் திட்டங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏராளமான அப்பாவி மக்கள் பலரும் லூயிஜி மஞ்ஜானிக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

லூயிஜி மஞ்ஜானியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் பதாகைகளுடன் நீதிமன்றங்கள், மக்கள் கூடும் இடங்களில் பலரும் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள்.

லூயிஜி மஞ்ஜானி கைது!

பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லூயிஜி மஞ்ஜானி, அரசு சார்பில் தொடரப்பட்டிருக்கும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வகையில் தான் நியூயார்க் திரும்ப ஒப்புக்கொண்டார்.

லூயிஜி மஞ்ஜானி அங்கிருந்து நியூயார்க் அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பிறகு காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com