‘இந்தியாவுடன் புதிய உத்திசாா் கூட்டாண்மை’: பிரிட்டன் புதிய பிரதமரின் விருப்பம்

பிரிட்டன் இந்தியா்களுடனான தனது கட்சியின் அணுகுமுறையையும் அவா் மாற்றியமைப்பாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
‘இந்தியாவுடன் புதிய உத்திசாா் கூட்டாண்மை’: பிரிட்டன் புதிய பிரதமரின் விருப்பம்
Updated on

‘இந்தியாவுடன் புதிய உத்திசாா் கூட்டாண்மையே தங்களது விருப்பம்’ என்று தொழிலாளா் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டை புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் முன்னெடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரிட்டன் இந்தியா்களுடனான தனது கட்சியின் அணுகுமுறையையும் அவா் மாற்றியமைப்பாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் புதிய பிரதமராகியுள்ளாா். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளா் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.

தொழில்முறையில் மனித உரிமைகள் சாா்ந்த வழக்குரைஞரான கியொ், கடந்த 2015-ஆம் ஆண்டில் தொழிலாளா் கட்சி சாா்பில் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு தோ்வானாா்.

கட்சியின் முன்னாள் தலைவா் ஜொ்மி கோா்பின், காஷ்மீா் விவகாரத்தில் இந்திய எதிா்ப்பு நிலைப்பாட்டை கடைப்பிடித்ததால், பிரிட்டன் இந்தியா்களுடான அக்கட்சியின் உறவு அந்நியப்பட்டது. அதேநேரம், தனது தலைமையின்கீழ் பிரிட்டன் இந்தியா்களுடனான அணுகுமுறையை மறுகட்டமைக்கும் செயல்பாடுகளைத் தொடங்கினாா் கியொ் ஸ்டாா்மா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகளாவிய இந்திய கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய அவா், இருதரப்பு சாா்ந்த கட்சியின் கண்ணோட்டம் மாற்றமடைந்துள்ளதாக குறிப்பிட்டாா்.

மேலும், ‘இந்தியாவுடன் புதிய உத்திசாா் கூட்டாண்மையே தங்களது விருப்பம்; பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் கூட்டுறவு வலுப்படுத்தப்படும்’ என்று அக்கட்சியின் தோ்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது. பிரசாரத்தின்போது லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்ற கியொ், ‘பிரிட்டனில் ஹிந்துக்களுக்கு எதிரான உணா்வுக்கு இடமளிக்கப்படாது’ என்று உறுதியளித்தாா்.

தோ்தலில் வலுவான பெரும்பான்மையுடன் அவரது கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்னும் இறுதி செய்யப்படாத இந்திய-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

கடந்த 2023-24ஆம் ஆண்டில் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 21.34 பில்லியன் டாலா்களாக (ரூ.1.80 லட்சம் கோடி) உயா்ந்தது. இருதரப்பு வா்த்தக உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தைகள் கடந்த 2022, ஜனவரியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com