
நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சீன விண்கலமான சாங்’இ-6 நிலவின் பாறை மற்றும் மணல் மாதிரிகளைச் சேகரித்துவிட்டு இன்று மதியம் பூமிக்குத் திரும்பி வந்துள்ளது.
இந்த விண்கலம் வடக்குச் சீனாவின் மங்கோலியப் பகுதியில் தரையிறங்கியுள்ளது.
கடந்த மே 3 அன்று பூமியில் இருந்து கிளம்பிய விண்கலம் 53 நாட்கள் கழித்து தனது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியுள்ளது.
இந்த விண்கலம் சேகரித்த நிலவின் பாறை மற்றும் மணல் மாதிரிகள் 2.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான எரிமலையுடையதாக இருக்கும் என்றும், இந்த மாதிரிகள் நிலவின் இரு துருவம் குறித்த வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
”சாங்’இ-6 விண்கலம் நிலவு ஆராய்ச்சியில் வெற்றிகரமாகத் தன்னுடைய முழுமையான இலக்கை எட்டிவிட்டது” என்று சீன விண்வெளி ஆராய்ச்சித் துறையின் இயக்குநரான ஷாங் கெஜியன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக நிலவின் அறியப்படும் பகுதிகளில் இருந்து அமெரிக்காவும், ரஷ்யாவும் மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சந்திராயன் 3 செயற்கைக்கோளை நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக இறக்கி இந்திய சாதனைப் படைத்தது. அதன் பின்னர், சீன விண்கலம் முதன்முறையாக தென் துருவப் பகுதியிலுள்ள நிலவின் மணல் மற்றும் பாறை மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெற்றிகரமாக பூமிக்கு எடுத்து வந்துள்ளது.
”விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தில் நமது நாட்டின் முக்கிய சாதனை இது” என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள் நிலவு குறித்த ஆராய்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மற்ற நாடுகளிலிருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் இந்த மாதிரிகளைக் கொடுத்து ஆராயவுள்ளதாகவும் சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தன்னுடைய சொந்த விண்வெளி மையத்தை உருவாக்கி, தொடர்ந்து வீரர்களை ஆராய்ச்சிக்காக அனுப்பி வருகிறது. மேலும், 2030-ம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும் சீனா திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.